2021-ம் ஆண்டு முதல் 2026-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 4,797 கோடி ரூபாய் செலவில் மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் “பிரித்வி விக்யான்” திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. 1.வளிமண்டலம், பருவநிலை மாறுதல் ஆராய்ச்சி-மாதிரி கூர் கவனிப்பு அமைப்புகள்& சேவைகள் 2.பெருங்கடல் சேவைகள், மாதிரி செயலிகள், மூலவளங்கள் மற்றும் தொழில்நுட்பம் 3.துருவ அறிவியல் மற்றும் கிரையோஸ்பியர் ஆராய்ச்சி 4.நில அதிர்வு மற்றும் புவி அறிவியல் 5. ஆராய்ச்சி, கல்வி, பயிற்சி, மக்களுக்கு தகவல் தெரிவித்தல் ஆகிய தற்போதைய ஐந்து துணைத் திட்டங்களை இப்பெருந்திட்டம் உள்ளடக்கியுள்ளது.
மத்திய அமைச்சரவை 2024 செப்டம்பர் 11 அன்று 2,000 கோடி ரூபாய் செலவில் ‘மிஷன் மவுசம்’ திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இத்திட்டம் இந்தியாவின் வானிலை, பருவநிலை தொடர்பான அறிவியல், ஆராய்ச்சி, சேவைகளை மேம்படுத்துவதற்கான பன்முக தன்மை கொண்டதாக இருக்கும்.
2024 ஜனவரி 03 அன்று கட்மத்தில் (லட்சத்தீவு) தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம் அமைத்துள்ள 1.5 லட்சம் லிட்டர் குறைந்த வெப்பநிலையில் வெப்ப உப்புநீக்கி ஆலையைப் பிரதமர் திறந்து வைத்தார்.
ஆழ்கடல் திட்டத்தின் கீழ், முதல் முறையாக, என்சிபிஓஆர் மற்றும் என்ஐஓடி விஞ்ஞானிகள் இந்தியப் பெருங்கடலின் மேற்பரப்பிலிருந்து 4,500 மீட்டர் கீழே அமைந்துள்ள ஹைட்ரோதெர்மல் வென்ட்டின் படத்தை எடுத்துள்ளனர். இந்த தளம் பொருளாதார மற்றும் உயிரியல் துறையில் ஆய்வுக்குப் பயன்படும்.
2024 பிப்ரவரி 23 அன்று உத்தராகண்ட் மாநிலம் லான்ஸ்டவுனில் டாப்ளர் வானிலை கண்காணிப்பு ரேடாரை மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் திறந்து வைத்தார்.
2024 மார்ச் 12 அன்று விசாகப்பட்டினத்தில் உள்ள டால்பின் மூக்குப் பகுதியில் என்சிசிஆரின் கடலோர ஆராய்ச்சி ஆய்வகத்தை மத்திய புவி அறிவியல் அமைச்சகம் திறந்து வைத்தது.
2024 மார்ச் 12 அன்று மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள சில்கேடாவில் வளிமண்டல ஆராய்ச்சி சோதனைப் படுக்கை வசதியை மும்பையில் உள்ள ஐஐடி நிறுவனத்தால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த வசதி பருவமழையுடன் தொடர்புடைய மேகக் கூட்டங்களின் நகர்வுகள் குறித்து ஆய்வு செய்வதற்கான அமைப்புகளைக் கொண்டிருக்கும்.
இந்திய வானிலை ஆய்வு மையம் நிறுவப்பட்டு நாட்டின் சேவையில் அதன் 150-வது ஆண்டானது 2024 ஜனவரி 15 அன்று புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் கொண்டாடப்பட்டது.
2024 செப்டம்பர் 29, அன்று உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் கோவிலில் ஹெலிபோர்ட் தானியங்கி வானிலை கண்காணிப்பு அமைப்பை புவி அறிவியல் துறை செயலாளர் திறந்து வைத்தார். இந்திய வானிலை ஆய்வு மையம், உத்தரகண்ட் சிவில் விமானப் போக்குவரத்து மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றால் செயல்படுத்தப்படும் இந்த அமைப்பு, யாத்திரை செல்லும் பருவங்களில் பாதுகாப்பான ஹெலிகாப்டர் சேவைகளுக்கான வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்தும்.