தொழில்துறையின் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்த தீர்க்கமான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. கார்பன் உமிழ்வைக் குறைக்கவும், நிகர பூஜ்ஜிய இலக்கை நோக்கி முன்னேறவும் எஃகு தொழில்துறைக்கு உதவுவதற்காக ரூ.15,000 கோடி மதிப்பில் ‘பசுமை எஃகு இயக்கத்தை’ எஃகு அமைச்சகம் உருவாக்கி வருகிறது. பசுமை எஃகுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்துவதற்கான ஊக்கத்தொகை மற்றும் அரசு நிறுவனங்கள் கட்டாயமாக பசுமை எஃகு வாங்க வேண்டும் ஆகியவை இந்த இயக்கத்தில் அடங்கும். புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தால் முன்னெடுக்கப்படும் தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம், பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்து பயன்படுத்துவதற்கான பரந்த இலக்கில் எஃகு துறையை ஒருங்கிணைக்கிறது. எஃகு உற்பத்தியின் கார்பன் நீக்கத்திற்கும் இது பங்களிக்கிறது. எஃகுத் துறையில் கார்பன் நீக்கம் செய்வதற்கான பல்வேறு முக்கிய தூண்டுதல்களுக்காக எஃகு அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட 14 பணிக்குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் ‘இந்தியாவில் எஃகுத் துறையை பசுமையாக்குதல் வரைபடம் மற்றும் செயல் திட்டம்’ குறித்த அறிக்கை 10.09.2024 அன்று வெளியிடப்பட்டது. மேலும், இந்தியாவிற்கான பசுமை எஃகு வகைப்பாட்டியல் 12.12.2024 அன்று வெளியிடப்பட்டது. இதில், பசுமை எஃகு மற்றும் பசுமை நட்சத்திர தரவரிசை வரையறுக்கப்பட்டுள்ளது. எஃகு கழிவு மறுசுழற்சி கொள்கை உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கழிவு கிடைக்கும் தன்மையை அதிகரிப்பதன் மூலம் இந்த முயற்சிகளை மேலும் நிறைவு செய்கிறது, இதனால் வள செயல்திறனை மேம்படுத்துகிறது. இது பசுமை எஃகு உற்பத்தி, பசுமை எஃகுக்கான சந்தையை உருவாக்குதல் மற்றும் நிதி உதவி கோருவதற்கான கட்டமைப்பை வழங்குகிறது.
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் பயன்பாட்டிற்காக தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த இயக்கத்தில் எஃகுத் துறையும் ஒரு பங்குதாரராக உள்ளது. இரும்பு மற்றும் எஃகுத் துறையின் முன்னோடித் திட்டங்களை 2029-30 நிதியாண்டு வரை செயல்படுத்த பட்ஜெட்டில் ரூ.455 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் கீழ், எஃகு அமைச்சகம் 100% ஹைட்ரஜனைப் பயன்படுத்தும் இரண்டு முன்னோடி திட்டங்களையும், நிலக்கரி கல்கரி பயன்பாட்டைக் குறைக்க தற்போதுள்ள வெடிப்பு உலையில் ஹைட்ரஜனைப் பயன்படுத்துவதற்கான ஒரு முன்னோடி திட்டத்தையும் 19.10.2024 அன்று வழங்கியுள்ளது.
உள்நாட்டு எஃகு உற்பத்தியை அதிகரிக்க, மூலதன முதலீடுகளை ஈர்ப்பதையும் இறக்குமதியைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்ட உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம் ஒரு முக்கிய முயற்சியாகும். இதில் பங்கேற்கும் நிறுவனங்கள் ரூ.27,106 கோடி முதலீடு, 14,760 நேரடி வேலைவாய்ப்பு மற்றும் 7.90 மில்லியன் டன் ‘சிறப்புத் தன்மை எஃகு ‘ உற்பத்தி என உறுதியளித்துள்ளன. அக்டோபர் 2024 நிலவரப்படி, நிறுவனங்கள் ஏற்கனவே ரூ. 17,581 கோடியை முதலீடு செய்துள்ளன, 8,660 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.
மகாராஷ்டிரா உட்பட நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் எஃகுத் துறையின் வளர்ச்சிக்கு உகந்த கொள்கைச் சூழலை உருவாக்குவதன் மூலம் வசதி செய்து தரும் அமைப்பாக அரசு செயல்படுகிறது. எதுவாயினும், எஃகின் பெரும்பாலான தரங்களில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது, நாட்டின் எஃகு உற்பத்தியில் இறக்குமதியின் பங்கு மிகக் குறைந்த சதவீதமாகவே உள்ளது.
மூலப்பொருள் பாதுகாப்பு உள்நாட்டு எஃகு தொழிலின் தற்போதைய தேவை நுகர்வை பூர்த்தி செய்ய நாட்டில் இரும்புத் தாது மற்றும் கோக்கிங் அல்லாத நிலக்கரி போதுமான இருப்பு உள்ளது. இருப்பினும், ஒருங்கிணைந்த எஃகு உற்பத்தியாளர்களால் முதன்மையாகப் பயன்படுத்தப்படும் தேவையுடன் ஒப்பிடும்போது நாட்டில் உயர்தர நிலக்கரி கோக்கிங் நிலக்கரி (குறைந்த சாம்பல் உள்ள நிலக்கரி) வழங்கல் குறைவாக இருப்பதால் கோக்கிங் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ரஷ்யா, இந்தோனேசியா, மொசாம்பிக் போன்ற பல்வகைப்பட்ட நாடுகளிடமிருந்து கோக்கிங் நிலக்கரியை கொள்முதல் செய்து வருகின்றன.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கோக்கிங் நிலக்கரியின் பெரும்பகுதி மிக உயர்ந்த சாம்பல் உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பதால் இறக்குமதி அவசியம் ஆகிறது. 2020-21 ஆம் ஆண்டில் 51.20 எம்எம்டி (மில்லியன் மெட்ரிக் டன்), 2021-22 ஆம் ஆண்டில் 57.16 எம்எம்டி, 2022-23 ஆம் ஆண்டில் 56.05 எம்எம்டி, 2023-24 ஆம் ஆண்டில் 58.12 எம்எம்டி மற்றும் 2024-25 ஆம் ஆண்டில் செப்டம்பர் 2024 வரை 30.19 எம் எம் டி கோக்கிங் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது .இந்த இறக்குமதியின் பெரும்பகுதி ஆஸ்திரேலியாவிலிருந்து வருகிறது.
எஃகு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் கோக்கிங் நிலக்கரியில் ஒத்துழைப்பு குறித்து இந்திய அரசின் எஃகு அமைச்சகம் மற்றும் ரஷ்ய கூட்டமைப்பின் எரிசக்தி அமைச்சகம் இடையே 14.10.2021 அன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ரஷ்யாவிலிருந்து கோக்கிங் நிலக்கரி இறக்குமதி 2021-22 நிதியாண்டில் 1.506 எம்எம்டி, நிதியாண்டு 2022-23 இல் 4.481 எம்எம்டி, நிதியாண்டு 2023-24 இல் 5.256 எம்எம்டி மற்றும் நிதியாண்டு 2024-25 (செப்டம்பர் 24 வரை) தோராயமாக 4.034 எம்டி ஆக உள்ளது. 2024-25 நிதியாண்டில் (அக்டோபர்’24 வரை), ரஷ்யாவிலிருந்து செயில் நிறுவனத்தின் மொத்த கோக்கிங் நிலக்கரி இறக்குமதி தோராயமாக 545,000 மெட்ரிக் டன் ஆகும், அதே நேரத்தில் என்எஸ்எல் சுமார் 78,520 மெட்ரிக் டன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் போட்டித்தன்மை மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கு இந்தியாவின் எஃகு துறைக்கான உலகளாவிய உத்தியை உருவாக்குவது முக்கியமானதாகும்.உலகளாவிய நிறுவனங்களுடன் கூட்டாண்மையை வளர்ப்பது, சர்வதேச மன்றங்களில் பங்கேற்பது ஆகிய உலகளாவிய சிறந்த நடைமுறைகளுடன் இந்தியா தனது தரத்தை சீரமைத்து வருகிறது. ஒரு விரிவான உலகளாவிய உத்தி இந்தியாவை எஃகு தொழிலில் ஒரு தலைவராக நிலைநிறுத்தும், உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்யும் திறன் கொண்டது. அதே நேரத்தில் ஒரு குறிப்பிடத்தக்க ஏற்றுமதியாளராகவும் மாறும்.