(சென்னை ஐஐடி), நாட்டிலேயே மிகப் பெரிய அளவில் மாணவர்களால் நடத்தப்படும் சாஸ்த்ரா திருவிழாவின் 26-வது ஆண்டு நிகழ்வை 2025-ம் ஆண்டு ஜனவரி 3-ந் தேதி தொடங்கி 7-ந் தேதி வரை சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் நடத்த உள்ளது.
முற்றிலும் மாணவர்களால் மட்டுமே நிர்வகிக்கப்படும் இந்த மாபெரும் நிகழ்வில் சென்னை ஐஐடி-ன் 750-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர். ஐஎஸ்ஓ 9001:2015 சான்றளிக்கப்பட்ட இந்த விழாவில் 130 அரங்குகள் இடம்பெறுகின்றன. தொடர்ச்சியாக 80 நிகழ்வுகள் நடைபெற உள்ள நிலையில், ஐந்து நாட்களில் 70,000 பேர் வரை இந்நிகழ்ச்சியை பார்வையிட வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டிகள், மாநாடுகள், விரிவுரைகள், கண்காட்சிகள், பயிலரங்கங்கள் வாயிலாக இந்த அறிவியல்- தொழில்நுட்ப நிகழ்வை சாஸ்த்ரா கொண்டாடவிருக்கிறது.
இக்கல்வி நிறுவன வளாகத்தில் இன்று (30 டிசம்பர் 2024) சாஸ்த்ரா 2025 நிகழ்வுக்கான அறிவிப்பை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, “சாஸ்த்ரா போன்ற மாபெரும் நிகழ்ச்சியை நடத்துவதன் மூலம், மாணவர்களிடையே நிர்வாகத் திறன், அர்ப்பணிப்பு, பொறுப்புணர்வு, பொது நோக்கத்திற்காக பெரிய குழுக்களுடன் இணைந்து பணியாற்றும் திறன் போன்ற உயர் பண்புகளை வளர்க்கச் செய்கிறது. சென்னை ஐஐடியை சேர்ந்த மாணவர்கள் இதுபோன்ற தேசிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலம் தங்களது திறன்களை வெளிக்கொண்டு வர உதவுகிறது. பல்வேறு அரசு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பெரு நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள், தொழில்முனைவோர் மட்டுமின்றி, தலைசிறந்த முக்கிய பிரமுகர்களையும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
சாஸ்த்ரா 2025-ன் விழாவின் பங்கேற்பாளர்களில் ஒருவரான தேசிய கடல்சார் தொழில்நுட்ப பல்கலைக் கழக இயக்குநர் டாக்டர் பாலாஜி ராமகிருஷ்ணன் கூறும்போது, “சென்னை ஐஐடி-ன் சாஸ்த்ரா 2025 நிகழ்ச்சியில் பங்கேற்பதில் தேசிய கடல்சார் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் பெருமிதம் கொள்கிறது. தொழில்நுட்பம், கடல்சார் அறிவியல் போன்றவற்றில் அன்றாட சவால்களுக்குத் தீர்வுகாண இளைஞர்களை ஊக்குவிப்பதிலும், கண்டுபிடிப்புகளை ஆதரிப்பதிலும் இந்த இரு கல்வி நிறுவனங்களின் இலக்கும் ஒரே மாதிரியாக உள்ளது என்று கூறினார். செயற்கை நுண்ணறிவு, ரோபாடிக்ஸ், நீடித்த கடல்சார் தொழில்நுட்பங்கள் போன்ற அதிநவீன துறைகளில் கூட்டு ஆராய்ச்சி, திறன் மேம்பாடு ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில், கல்வி, தேசிய கடல்சார் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் நிபுணத்துவம் ஆகியவற்றுக்கு இடையேயான அறிவு பரிமாற்றத்திற்கான தனித்துவமிக்க தளத்தை இந்த நிகழ்ச்சி வழங்குகிறது” எனத் தெரிவித்தார்.