ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியம், 1928-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் விளையாட்டை மேம்படுத்துவதில் பெரும் பங்காற்றி வருகிறது. ஹாக்கி, தடகளம், டென்னிஸ் ஆகியவற்றை ஊக்குவிப்பதிலும் தற்போது நாட்டில் ஒட்டுமொத்தமாக விளையாட்டை மேம்படுத்துவதிலும் ஒரு முக்கியமான நிறுவனமாக ரெயில்வே மாறியுள்ளது. தற்போது 29 விளையாட்டு பிரிவுகள் ரெயில்வேயில் உள்ளன. 18 தனிநபர் விளையாட்டுகள் மற்றும் 11 குழு விளையாட்டுகள் இவற்றில் அடங்கியுள்ளன. ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியம் 28 தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. யு.எஸ்.ஐ.சி (உலக ரயில்வே விளையாட்டு சங்கம்) உடன் இணைக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்புகள் மூலம் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம் இந்திய ரயில்வே கணிசமான எண்ணிக்கையிலான விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவளித்துள்ளது. இந்திய ரயில்வேயில் 29 விளையாட்டுப் பிரிவுகளில் 9000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் சுமார் 3,000 பேர் தீவிர விளையாட்டு வீரர்கள். சர்வதேச அளவில் மதிப்புமிக்க போட்டிகளில் இவர்களின் செயல் திறன் சிறப்பாக உள்ளது.
2024-ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. அர்ஜுனா விருது பெற்ற 32 விளையாட்டு வீரர்களில் 5 வீரர்கள் இந்திய ரயில்வேயைச் சேர்ந்தவர்கள் என்பது பெருமைக்குரியது.
செல்வி ஜோதி யர்ராஜி, எஸ்.சி.ஆர் (தடகளம்-100 மீ தடை ஓட்டம்)
செல்வி அன்னு ராணி, பி.எல்.டபிள்யூ (தடகளம்-ஈட்டி எறிதல்)
திருமதி சலிமா டெட்டே, எஸ்இஆர் (ஹாக்கி)
ஸ்வப்னில் சுரேஷ் குசாலே, சிஆர் (துப்பாக்கி சுடுதல்-50 மீ 3பி)
அமன், என்.ஆர் (மல்யுத்தம்-57 கிலோ ஃப்ரீஸ்டைல்) ஆகியோர் ரயில்வே வீரர்கள் ஆவர்.
இந்த 5 அர்ஜுனா விருதுகளுடன், மொத்தம் 183 அர்ஜுனா, 28 பத்மஸ்ரீ, 12 தயான் சந்த், 13 துரோணாச்சார்யா மற்றும் 9 மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுகளைப் பெற்றவர்கள் இந்திய ரயில்வேயின் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 2025 ஜனவரி 17 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழாவில் குடியரசுத் தலைவரிடமிருந்து அவர்கள் விருதுகள் பெறுவார்கள்.