சீர்மரபு பிரிவினர், நாடோடி சமூகங்கள், பகுதி நாடோடி சமூகங்களின் (DNT – டிஎன்டி) நலன், மேம்பாடு குறித்து கவனம் செலுத்தும் முக்கிய கூட்டம் மத்திய சமூக நீதி – அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தலைமையில் புதுதில்லியில் இன்று (02.01.2025) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் திரு ராம்தாஸ் அத்வாலே, சமூக நீதி – அதிகாரமளித்தல் துறையின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
டிஎன்டி சமூகங்களை மேம்படுத்துவதற்காக மாநிலங்களில் செயல்படுத்தப்படும் புதுமையான முயற்சிகளையும் வெற்றிகரமான நடைமுறைகளையும் விளக்கி, சக வயதினரின் கற்றலுக்கான ஒரு ஆற்றல்மிக்க தளமாக இந்தக் கூட்டம் அமைந்தது. மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு அரசுகளின் பிரதிநிதிகள் இந்த சமூகங்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்களை எதிர்கொள்வதற்கும் அவர்களின் முழுமையான வளர்ச்சியை ஆதரிப்பதற்கும் தங்கள் மாநிலத்தில் செயல்படுத்தடும் உத்திகளையும் தீர்வுகளையும் பகிர்ந்து கொண்டனர்.
மேலும், சுகாதார அமைச்சகம், கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் முக்கிய ஆலோசனைகளை வழங்கினர். இதுதவிர, 14 அமைப்புகளின் பிரதிநிதிகள், தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி – மேம்பாட்டுக் கழகம் (NBCFDC), தேசிய பட்டியல் வகுப்பினர் நிதி – மேம்பாட்டுக் கழகம் (NSFDC), நாடு முழுவதும் உள்ள மாநில அளவிலான டிஎன்டி சங்கங்களின் உறுப்பினர்கள் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
டிஎன்டி சமூகங்களின் நலனை நோக்கமாகக் கொண்ட தற்போதைய முயற்சிகளை வலுப்படுத்த அறிவுப் பகிர்வு, பரஸ்பர கற்றலின் முக்கியத்துவத்தை இந்த விவாதங்கள் எடுத்துக் காட்டின. எந்தவொரு சமூகமும் பின்தங்கி விடக்கூடாது என்பதை உறுதி செய்ய கூட்டு நடவடிக்கையின் அவசியத்தை வலியுறுத்தி, உள்ளடக்கிய வளர்ச்சிக்கான உறுதிப்பாட்டை இந்த கூட்டம் மீண்டும் உறுதி செய்தது.
டிஎன்டி சமூகங்களுக்கு கல்வி, சுகாதாரம், நிலையான வாழ்வாதாரங்களுக்கான அணுகலை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. அரசுத் திட்டங்களை திறமையாகவும் வெளிப்படையாகவும் வழங்குவதில் தொழில்நுட்பம், டிஜிட்டல் தளங்களின் பங்கையும் விவாதங்கள் எடுத்துரைத்தன. டிஎன்டி சமூகங்களின் திறன்களை வெளிக் கொண்டு வந்து நல்ல எதிர்காலத்திற்கு வழி வகுக்கும் கூட்டுத் தீர்மானத்துடன் கூட்டம் நிறைவடைந்தது.