மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் (பிஎஸ்என்எல்) நிறுவனமானது, அனைத்து இந்திய உற்பத்தியாளர்களின் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இளைஞர்களை சுயதொழில் மற்றும் வேலைவாய்ப்பிற்கு வலுவூட்டுவதற்கும், தொலைத்தொடர்பு தொழில்நுட்ப தயாரிப்புகள் மற்றும் சேவைகள் துறையில் தொழில் முனைவு மற்றும் புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது.
சுமார் 20 மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் சேவை பயிற்சி குறித்த 3 நாள் பயிற்சித் திட்டத்தின் தொடக்க விழாவை பிஎஸ்என்எல் ஏற்பாடு செய்துள்ளது. இப்பயிற்சி திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவன மனிதவள இயக்குனர் டாக்டர் கல்யாண் சாகர் நிப்பானி சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ராஜீவ்காந்தி நினைவு தொலைத்தொடர்பு பயிற்சி மையத்தில் 01/01/2025 அன்று தொடங்கி வைத்தார். அகில இந்திய உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தேசிய பொதுச்செயலாளர் திரு.ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு மாநில வாரிய தலைவர் டாக்டர் A.அய்யாக்கண்ணு ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, பயிற்சி பெறுவோருக்கு விளக்கம் அளித்தனர். ராஜீவ் காந்தி நினைவு தொலைத்தொடர்பு பயிற்சி மையத்தின் முதல்வர் வரவேற்புறை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் கல்யாண் சாகர், மொபைல் தொழில் நுட்பம் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் ஒன்றாகும் என்றும், இந்த சேவையானது வளர்ச்சி மற்றும் அதிக வேலைவாய்ப்புக்களைக் கொண்ட துறை என்றும் குறிப்பிட்டார். இந்திய மொபைல் சந்தையானது 11.5 மில்லியன் இணைப்புகளுடன் சுமார் 10 மில்லியன் மொபைல் கைபேசிகளை கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். சந்தையில் ஒவ்வொரு மாதமும் புதிய தலைமுறை மொபைல் மாடல்கள் வெளியிடப்படுவதால் தொழில்துறை மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஆகவே இந்த தொழில்நுட்ப்பகளத்தில் திறமையான தொழிலாளர் தேவையானது மிகவும் அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.