ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் தாய்ப்பால் விழிப்புணர்வு வாரமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தாய்ப்பால் விழிப்புணர்வு வாரத்தின் கருப்பொருளாக “தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்னுரிமை அளிப்போம் – தாய்ப்பால் கொடுப்பதற்கு நிலையான ஆதரவு அமைப்புகளை உருவாக்குவோம் என்பதாகும். ஜிப்மர் மருத்துவமனையின் செவிலியர் துறை, செவிலியர் கல்லூரி, குழந்தைகள் நலத்துறை, பச்சிளம் குழந்தைகள் நலத்துறை, மற்றும் மகப்பேறு மருத்துவம் ஆகிய துறைகளைச் சார்ந்த மருத்துவர்களும், செவிலியர்களும் இணைந்து இந்த தாய்ப்பால் விழிப்புணர்வு வாரத்தைக் கொண்டாட உள்ளனர். தாய்ப்பால் விழிப்புணர்வு வாரத்தின் முதல் நாளில் செவிலியர் கல்லூரி மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை ஜிப்மர் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் வீர் சிங் நேகி தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் செவிலியர் கல்லூரியைச் சார்ந்த மாணவர்களும், மாணவிகளும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். பேரணி மருத்துவமனையின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதுடன் அது தொடர்பான நாடகங்களும், சுவரொட்டிகளும், கலைப்படைப்புகளும், பொதுமக்கள் பார்வைக்காக இந்த வாரம் முழுவதும் வைக்கப்பட உள்ளன. இதன்மூலம் பொதுமக்களுக்கு தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வும் பச்சிளம் குழந்தைகளை பாதுகாக்கும் முறைகளும் விரிவாக எடுத்துரைக்கப்படும்.
முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுப்பதால் குழந்தையின் இறப்பு, குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பொதுவான நோய்கள் தடுக்கப்படுகின்றன. தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு தவிர்க்கப்படுகிறது. தாய்ப்பாலில் பூரண ஊட்டச்சத்துக்கள் மட்டுமின்றி, நோய் எதிர்ப்பு சக்திகளும் உள்ளன. இயற்கை வழியில் தாய்ப்பால் கொடுப்பதால், தாய்க்கும் – சேய்க்கும் இடையேயான பந்தம் அதிகரிக்கிறது. அண்மையில் நடைபெற்ற தேசிய ஆய்வின்படி குழந்தை பிறந்த முதல் ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுக்கும் வழக்கம் 41% ஆகவும், ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுக்கும் வழக்கம் 64% ஆகவும் உள்ளது. இது மிகவும் குறைவானதாகும்.
அனைத்து குழந்தைகளுக்கும் முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுக்கலாம். தாய்ப்பால் குழந்தைகளுக்குத் தேவையான சரியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவாகும். முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுப்பதால், குழந்தைக்கு வயிற்றுப்போக்கு, நெஞ்சில் சளி, காதில் சீழ் போன்றவை ஏற்படாது. தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சியும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக இருக்கும். தாய்ப்பாலைத் தவிர்த்து மாட்டுப்பால், கிரைப்வாட்டர், புட்டிப் பால் போன்றவற்றை கொடுப்பதால், குழந்தைகளின் உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும். தாய்ப்பால் கொடுப்பதால் அன்னையருக்கு மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் தவிர்க்கப்படுகிறது. ஆறு மாதங்களுக்குப் பிறகு குழந்தைகளுக்கு வீட்டிலேயே செய்த இணை-உணவை தொடங்கலாம்.
பணிக்குச் செல்லும் தாய்மார்களும் முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்கும் வகையில் பணியிடங்களில் தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு ஏதுவான வசதிகளை நிறுவனங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். குறிப்பாக ஆறு மாதங்களுக்கான சம்பளத்துடன் கூடிய தாய்மை விடுப்பு கொடுப்பது, தாய்மார்கள் பணி புரியும் நிறுவனங்களில் சுத்தமான, தாய்ப்பால் ஊட்டுவதற்கு ஏதுவான தனியறை கொடுப்பது, பணியின்போது தாய்மார்கள் தாய்ப்பால் ஊட்ட இடைவேளை கொடுப்பது, பணி புரியும் இடத்தில் குழந்தைகள் காப்பகம் ஏற்படுத்திக் கொடுப்பது போன்றவை பயனளிக்கும்.
A79F.jpeg)
Matribhumi Samachar Tamil

