Wednesday, December 31 2025 | 04:44:32 AM
Breaking News

காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றினார்

Connect us on:

தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் இடையே உள்ள பழமையான  கலாச்சார இணைப்பைக் கொண்டாடும் வகையில் நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமம் நான்காவது ஆண்டு நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் காணொலிக் காட்சி வாயிலாக சிறப்பு செய்தியை வெளியிட்டார்.

கடந்த 2022- ம் ஆண்டு விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் போது தொடங்கப்பட்ட காசி தமிழ் சங்கமம் முன்முயற்சி, கங்கை மற்றும் காவேரியின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை ஒன்றிணைக்கும் முக்கியமான தேசிய தளமாக வளர்ந்திருக்கிறது என்று குடியரசு துணைத்தலைவர் குறிப்பிட்டார். நாட்டின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளின் கலாச்சார ஒற்றுமையையும், அவற்றின் பகிரப்பட்ட பாரம்பரிய நாகரிகங்களையும் இந்த நிகழ்ச்சி போற்றுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

அதற்கு உரிய மரியாதையும் தொடர்ச்சியான தேசிய ஆதரவும் தமிழ் மொழிக்கு வழங்கப்பட்டு வருவதற்கு திரு சி.பி. ராதாகிருஷ்ணன் தமது திருப்தியை வெளிப்படுத்தினார். மொழியியல் மற்றும் கலாச்சார இணக்கத்தை வலியுறுத்தும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள “தமிழ் கற்கலாம்” என்ற இந்த ஆண்டின் கருப்பொருளை அவர் வரவேற்றார்.

சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் பயிற்சியளிக்கப்பட்ட இந்தி பேசும் 50 தமிழ் ஆசிரியர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களின் முன்முயற்சியை அவர் பாராட்டினார். இவர்கள், 15 நாட்களில் ஐம்பது அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அடிப்படைத் தமிழைக் கற்பிப்பதற்காக வாரணாசியை வந்தடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையேயான பழமையான கலாச்சார வழித்தடங்களை மறு ஆய்வு செய்யும் முயற்சிகளைக் குறிப்பிட்ட குடியரசு துணைத்தலைவர், டிசம்பர் 2-ம் தேதி தொடங்கி 10-ம் தேதி நிறைவடையும் தென்காசி முதல் காசி வரையிலான அகத்தியர் யாத்திரையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையேயான கலாச்சார புரிதல் மற்றும் பரிமாற்றங்களை மேலும் வலுப்படுத்தும் வகையில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் உட்பட தமிழ்நாட்டில் உள்ள முன்னணி நிறுவனங்களுக்கு உத்தரப்பிரதேசத்தில் இருந்து 10 குழுக்களில் 300 மாணவர்கள் பயணம் மேற்கொள்ள இருப்பதையும் அவர் வரவேற்றார்.

சங்கமம் நிகழ்ச்சியை ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ உணர்வின் எடுத்துக்காட்டு என்று கூறிய திரு சி.பி. ராதாகிருஷ்ணன், இந்தியாவின் பழமையான நாகரீகத்தின் பிரகாசமான விளக்குகளாக ஜொலிக்கும் காசியும், தமிழ்நாடும் தங்களது வளமான கலாச்சாரங்களினால் தேசத்திற்கு ஒளியூட்டுகின்றன என்று தெரிவித்தார்.

சங்கமம் நிகழ்ச்சி மூலம், காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான பிணைப்பு ஆயிரம் ஆண்டுகளுக்கு வலுவாக இருக்கும் என்றும், இந்த ஒற்றுமை உணர்வு பிரதமரின் தொலைநோக்குத் தலைமையால் கற்பனை செய்யப்பட்ட பாரதத்தை நோக்கி நாட்டை வழிநடத்தும் என்றும் நம்பிக்கை தெரிவித்து குடியரசு துணைத்தலைவர் தமது உரையை நிறைவு செய்தார்.

About Matribhumi Samachar

Check Also

குருகிராமில் மாநகராட்சியால் பராமரிக்கப்படும் 125 சாலைகளில் ஆய்வு மேற்கொண்டது காற்றுத் தர மேலாண்மை ஆணையம்

குருகிராம் மாநகராட்சியால் பராமரிக்கப்படும் சாலைகளின் தூய்மை, பராமரிப்பு போன்றவை தொடர்பாக காற்றுத் தர மேலாண்மை ஆணையம்  26.12.2025 அன்று விரிவான …