ஓய்வூதிய சேவைகளை மேம்படுத்துவதற்கான ஒரு மைல்கல் நடவடிக்கையாக, தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம் 1995-ன் கீழ் புதிய மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியம் வழங்குதல் முறையின் முழு அளவிலான கட்டமைப்புப் பணிகளை தொழிலாளர் சேம நல நிதி நிறுவனம் 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிறைவு செய்தது. 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 68 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு 1570 கோடி ரூபாய் அளவிற்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது.
மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியம் செலுத்தும் முறையின் முதல் சோதனை அடிப்படையிலான செயல்பாடுகள் 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், ஜம்மு, ஸ்ரீநகர் மண்டல அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டது. இதில் 49,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய தொகையாக சுமார் 11 கோடி ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட்டது. இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட சோதனை அடிப்படையிலான செயல்பாடுகள் 2024-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 24 மண்டல அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டது. இதில் 9.3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு சுமார் 213 கோடி ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட்டது.
இந்த புதிய நடைமுறை குறித்து அறிவிப்பு வெளியிட்ட மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, ” தொழிலாளர் சேம நல நிதி நிறுவனத்தின் அனைத்து மண்டல அலுவலகங்களிலும் மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் முறையை முழு அளவில் செயல்படுத்துவது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும் என்று குறிப்பிட்டார். இதன் மூலம் ஓய்வூதியதாரர்கள் தங்களது ஓய்வூதிய தொகையை நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும், அனைத்து வங்கிகிளையிலிருந்தும் தடையின்றி பெற அதிகாரம் அளிக்கிறது.