“பெண்கள் தலைமையிலான வளர்ச்சி”யின் முக்கியத்துவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்து வருவதாக மொராகுடி கிராமத்தில் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த சுமார் 3,000 பெண்கள் திரண்டிருந்த கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை புவி அறிவியல் , பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை, விண்வெளி, பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தினார். இந்தியாவில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கான வாய்ப்புகளை சுய உதவிக் குழுக்கள் பிரதிபலிப்பதாக அவர் கூறினார்.
முன்னேற்றத்தை அடையவிரும்பும் மாவட்டங்கள்(ஆஸ்பைரேஷனல் மாவட்டங்கள்)திட்டத்தின் கீழ் ஒய்.எஸ்.ஆர் கடப்பா மாவட்டத்தில் மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டுள்ள இணையமைச்சர் பெண்கள் அதிகாரம், கல்வி, உள்கட்டமைப்பு, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.
மொராகுடி கிராமத்திற்குச் சென்ற டாக்டர் ஜிதேந்திர சிங், பெண்கள் தலைமையிலான சுய உதவிக் குழுக்களுடன் கலந்துரையாடினார். நிதி கல்வியறிவு, உணவு பதப்படுத்துதல், கைத்தறி, சிறுதானியம் சார்ந்த பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் கிராமப்புற பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் இந்த சுயஉதவிக் குழுக்கள் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்தார். பிரதமரின் உணவு பதப்படுத்தும் மிகச்சிறு நிறுவனங்களை முறைப்படுத்துதல் போன்ற மத்திய அரசு திட்டங்கள் இந்த சுய உதவிக் குழுக்களின் பொருளாதார தற்சார்பு நிலையை ஊக்குவிக்கின்றன. அவர்களின் முயற்சிகளுக்குப் பாராட்டு தெரிவித்த இணையமைச்சர், இந்தப் பிராந்தியத்தில் வேலைவாய்ப்பு, தொழில் முனைவோர் வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஆந்திர மாநிலத்தில் சமூகத்திற்கான வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் தொழில்துறை மேம்பாடு போன்ற திட்டங்கள் மூலம் திறன் மேம்பாடு ஊக்குவிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.