1985 ஜனவரி 4 அன்று நிறுவப்பட்ட அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித் துறை தனது 40-வது நிறுவன தினத்தை 2025 ஜனவரி 4 அன்று புதுதில்லி ஜன்பத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் கொண்டாட உள்ளது.
மத்திய அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல், பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங், சிறப்பு விருந்தினராக இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்குவார். மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூட், அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித் துறை செயலாளரும், சி.எஸ்.ஐ.ஆர். தலைமை இயக்குநருமான டாக்டர் என். கலைச்செல்வி ஆகியோர் நிறுவன நாள் கொண்டாட்டத்தில் உரையாற்றுவார்கள்.
தொழில்நுட்ப மேம்பாடு, பரிமாற்றம், பயன்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் உள்நாட்டு தொழில்துறை ஆராய்ச்சியை ஊக்குவிப்பது அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித் துறையின் முதன்மை நோக்கமாகும். வணிக ரீதியாக சாத்தியமான, உலக அளவில் போட்டியிடக்கூடிய தொழில் நுட்பங்களை உருவாக்குவதற்கு ஆராய்ச்சி, மேம்பாட்டில் ஈடுபட தொழில் துறையை ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாகும்.
தன்னாட்சி அமைப்பான அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்), இரண்டு பொதுத்துறை நிறுவனங்களான தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம், மத்திய மின்னணு நிறுவனம் ஆகியவற்றை அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித் துறை நிர்வகிக்கிறது.