உலக அளவில் நிச்சயமற்ற சூழல் உள்ள போதிலும் இந்தியாவின் பொருளாதார நிலை வலுவாக உள்ளது என பிரதமருக்கான முதன்மைச் செயலாளர் டாக்டர் பி கே மிஸ்ரா தெரிவித்துள்ளார். தன்பாதில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (சுரங்கம்) நடைபெற்ற நூற்றாண்டு நிறுவன வார விழாவை இன்று தொடங்கி வைத்து உரையாற்றிய அவர், வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்குகளை எட்டுவதில் ஐஐடி தன்பாத் முக்கியப் பங்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கல்வி நிறுவனத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு பேசுவது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று கூறினார். சுரங்கம், எரிசக்தி, புவிஅறிவியல் மற்றும் பயன்பாட்டு பொறியியல் போன்ற துறைகளில் இந்தக் கல்வி நிறுவனம் அளப்பரிய பங்காற்றியுள்ளதாக அவர் தெரிவித்தார். ஆசியாவின் சுரங்கம் குறித்த கல்வி அளிப்பதில் இந்த நிறுவனம் மிகவும் புகழ்பெற்ற நிறுவனமாக உள்ளதென்று அவர் கூறினார். கோல் இந்தியா, ஓஎன்ஜிசி, ஜிஎஸ்ஐ, என்டிபிசி போன்ற தேசிய அளவிலான பொதுத்துறை நிறுவனங்களுக்கும் இந்தக் கல்வி நிறுவனம் தங்களது நிபுணத்துவம் வாய்ந்த அனுபவங்களைத் தொடர்ந்து அளித்து வருவதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இந்தியா உலகின் முன்னணி நாடாக உருவெடுத்து வருவதாக அவர் கூறினார். இயற்கை மற்றும் கலாச்சாரத்தை சமநிலையில் கொண்டு செல்வதன் மூலம் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்கை எட்ட முடியும் என்று அவர் தெரிவித்தார். அனைத்துத் துறைகளிலும் தற்சார்பு என்ற நிலையை அடைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், பெண்கள் தலைமையிலான மேம்பாட்டு நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஊழல், சாதி மற்றும் இன வேறுபாடுகள் இன்றி அனைவரையும் உள்ளடக்கியதாகவும் புதுமை கண்டுபிடிப்புகளுடனும் பொருளாதார வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டும் என்று அவர் கூறினார்.
கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகள் விரைவான வளர்ச்சிக் கண்டு வருவதாக அவர் கூறினார். போட்டித் தன்மையை ஊக்குவிப்பது, தொழில்நுட்ப மேம்பாடு, சர்வதேச சவால்களை எதிர்கொள்வது, தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நலத்திட்டங்களைக் கொண்டு செல்வது பொருளாதார வளர்ச்சிக்கான நான்கு முக்கிய அம்சம் என்று அவர் தெரிவித்தார்.
Matribhumi Samachar Tamil

