மதுரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மண்டல மையத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று மையத்தை மத்திய சமூக நீதி, அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் திரு விரேந்திர குமார் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரம் அளிப்பதில் மத்திய அரசின் உறுதிப்பாட்டை இந்த நிகழ்ச்சி பிரதிபலிப்பதாக கூறினார். அது மட்டுமின்றி, உயர்தர சேவைகளை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதற்கான நமது முயற்சிகளை வலுப்படுத்துகிறது என அவர் தெரிவித்தார்.
தற்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் கீழ் நாடு முழுவதும் 25 கூட்டு மண்டல மையங்கள் செயல்பட்டு வருகின்றன என அவர் குறிப்பிட்டார். இம்மையங்கள் பரவலாக்கப்பட்ட நிறுவனங்களாக செயல்பட்டு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் மறுவாழ்வு, கல்வி, திறன் மேம்பாடு, சமூக ஒருமைப்பாடு போன்ற ஒருங்கிணைந்த சேவைகளை வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.
மதுரை பகுதி மாற்றுத் திறனாளிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் என்று அவர் கூறினார். சென்னையில் உள்ள பல்வகை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய நிறுவனம் தமிழ்நாட்டில் பல்வகை மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைகளை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார். மதுரையில் மண்டல மையம் நிறுவப்படுவதன் மூலம், சிறப்பு சேவைகளை மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அவர் கூறினார். இதனால் மாற்றுத்திறனாளிகள் தங்கள் வீடுகளுக்கு அருகிலேயே உதவிகளைப் பெற முடியும் என அமைச்சர் திரு விரேந்திர குமார் கூறினார்.
இத்திட்டத்தை செயல்படுத்த உதவிய தமிழ்நாடு அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். மதுரை மையம் திறம்பட செயல்படுவதை உறுதி செய்ய, மாநில அதிகாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தீவிரமாக ஆதரவளித்து ஒத்துழைக்க வேண்டும் என்று அமைச்சர் திரு விரேந்திர குமார் கேட்டுக் கொண்டார்.