விவசாயிகளின் உற்பத்தித்திறன், நிலைத்தன்மை மற்றும் வருமானத்தை அதிகரிக்க உதவும் வகையில் விவசாயத் தொழில்நுட்பத்தை மேம்படுத்த அரசு பல முக்கிய திட்டங்களைத் தொடங்கியுள்ளது. டிஜிட்டல் வேளாண்மை இயக்கம் என்பது பயிர் கண்காணிப்பு, மண் மேலாண்மை மற்றும் வானிலை முன்னறிவிப்புக்காக செயற்கை நுண்ணறிவு, புவிசார் தரவு போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் ஒரு முக்கிய முயற்சியாகும். கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் 2900 வகைகளை உருவாக்கியுள்ளது. அவற்றில் 2661 வகைகள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உயிரியல் மற்றும்/அல்லது உயிரற்ற கூறுகளின் அழுத்தங்களைப் பொறுத்துக்கொள்ளும். விவசாயத்தின் உற்பத்தி மற்றும் அறுவடைக்குப் பிந்தைய உற்பத்திக்காக சுமார் 156 தொழில்நுட்பங்கள்/ இயந்திரங்கள்/ செயல்முறை நெறிமுறைகள் உருவாக்கப்பட்டன.
ரசாயன உரங்களை நியாயமான முறையில் பயன்படுத்துவதற்கும் மண் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் தாவர ஊட்டச்சத்துக்களின் கனிம மற்றும் கரிம மூலங்களை (உரம், உயிர் உரங்கள் போன்றவை) இணைந்து பயன்படுத்துவதன் மூலம் மண் பரிசோதனை அடிப்படையிலான சமச்சீர் மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மையை ஐசிஏஆர் பரிந்துரைக்கிறது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் நாட்டில் ரசாயன உரப் பயன்பாட்டைக் குறைக்கின்றன. மேலும், பாசன நீரை கணிசமாக சேமிக்க பல்வேறு பயிர்களுக்கு நுண்ணிய நீர்ப்பாசனம் உள்ளிட்ட திறமையான நீர்ப்பாசன நுட்பங்கள் மூலம் தண்ணீரை நியாயமான முறையில் பயன்படுத்த ஐசிஏஆர் பரிந்துரைக்கிறது.
மண்வள அட்டைத் திட்டமானது மண்ணுக்கு ஏற்ற உரங்களைப பயன்படுத்த உதவுகிறது. இதனால் உரங்கள் வீணாவது குறைக்கப்பட்டு உற்பத்தித்திறனை மேம்படுத்துவதை ஊக்குவிக்கிறது.
இந்தத் தகவலை வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு பகீரத் சவுத்ரி இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
Matribhumi Samachar Tamil

