மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி ஹைதராபாத்தில் இன்று உலக சுரங்க பேரமைப்பின் இந்திய தேசிய குழு கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட தேசிய மற்றும் சர்வதேச பங்கேற்பாளர்களை அவர் வரவேற்றார். பொறுப்பான, வெளிப்படையான, நிலையான சுரங்க நடைமுறைகளுக்கான இந்தியாவின் நிலைப்பாட்டை அவர் உறுதிப்படுத்தினார்.
1958-ம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல், உலக சுரங்க பேரமைப்பு, சுரங்கத் துறையில் ஒத்துழைப்பு, புதுமைகளை ஊக்குவிப்பதற்கான ஒரு அத்தியாவசிய உலகளாவிய தளமாக செயல்பட்டு வருவதாக அமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார். உலகம் பசுமையான சுரங்க நடைமுறைகளுக்கு மாறும்போது, இந்த அமைப்பின் பங்கு முன்னெப்போதையும் விட முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கனிம வளங்களில் தன்னிறைவை அடைதல் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான உறுதிப்பாட்டைப் பராமரித்தல் என்ற இரட்டை இலக்குகளுடன் நிலையான சுரங்கநடைமுறைகளுக்கான இந்தியாவின் நிலைப்பாடு உள்ளதாகவும் அவர் கூறினார்.
நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் முதல் முறையாக, அறிவியல் திட்டமிடலுடன் பத்து சுரங்கங்கள் வெற்றிகரமாக மூடப்பட்டுள்ளதாகவும், மேலும் 147 சுரங்கங்கள் சரியான நேரத்தில் மூடப்படுவதற்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் பசுமை வளர்ச்சியையும், நிலையான எதிர்காலத்திற்கான உற்பத்தி லட்சியங்களையும் அதிகரிக்க, அலுமினியம் மற்றும் தாமிரம் போன்ற கனிமங்களுக்கான உத்திசார் தொலைநோக்குத் திட்டங்களையும் அவர் அறிவித்தார். மறுபயன்பாட்டு சுரங்கங்கள் தற்போது குடிநீரை விநியோகிப்பதுடன், விவசாயத்திற்கும் தண்ணீர் வழங்கி வருவதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தின் செயல்பாட்டை மேற்கோள் காட்டினார்.
“பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், சுரங்கங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக நல்வாழ்வுடன் எப்படி இணைந்து செயல்படுகின்றன என்பதை இந்தியா எடுத்துக்காட்டியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
Matribhumi Samachar Tamil

