தூரந்த் கோப்பைப் போட்டித் தொடர் 2025-க்கான கோப்பைகளை குடியரசுத்தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் இன்று (04.07.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், விளையாட்டுகள் ஒழுக்கத்தை, மன உறுதியை, அணி உணர்வை மேம்படுத்துகின்றன என்றார். மக்களை, பிராந்தியங்களை, நாடுகளை இணைக்கும் தனித்துவ ஆற்றலை விளையாட்டுகள் கொண்டுள்ளன. இந்தியாவில் தேசிய ஒருமைப்பாட்டுக்கு சக்தி மிக்க கருவியாக அது விளங்குகிறது. ஒலிம்பிக் போட்டிகளில் அல்லது இதர சர்வதேச போட்டிகளில் மூவண்ணக் கொடி பறக்கும் போது, இந்திய மக்கள் அனைவரும் உற்சாகம் அடைகின்றனர் என்று அவர் கூறினார்.
லட்சக்கணக்கானோரின் இதயங்களில் கால்பந்து விளையாட்டுக்கு சிறப்பிடம் இருப்பதாக குடியரசுத்தலைவர் கூறினார். இது வெறும் விளையாட்டு அல்ல; ஒரு பேரார்வம். கால்பந்து விளையாட்டு என்பது பொதுவான நோக்கத்தை (கோல்) அடைவதற்கு ஒன்றுபட்ட உத்தி, விடாமுயற்சி, உழைப்பு ஆகியவற்றைக் குறிப்பதாகும். தூரந்த் கோப்பை போன்ற நிகழ்வுகள், விளையாட்டு உணர்வை வளர்ப்பது மட்டுமின்றி, அடுத்த தலைமுறை கால்பந்து விளையாட்டு வீரர்களை உருவாக்கவும் அவர்கள் வளர்வதற்கான தளத்தை வழங்குவதற்கும் உதவுகின்றன என்று அவர் தெரிவித்தார். தூரந்த் கோப்பையின் உணர்வை மேம்படுத்துவதிலும் அதனை உயிரோட்டமாக வைத்திருப்பதிலும் ஆயுதப்படைகளின் பங்களிப்பை குடியரசுத்தலைவர் பாராட்டினார்.
Matribhumi Samachar Tamil

