மத்திய எஃகு மற்றும் கனரக தொழில்துறை அமைச்சர் திரு எச்.டி. குமாரசாமி, 6 ஜனவரி 2025 அன்று புது தில்லியின் மௌலானா ஆசாத் சாலையில் உள்ள விஞ்ஞான் பவனில் எஃகுத் தொழிலுக்கான ‘பிஎல்ஐ திட்டம் 1.1’ ஐ அறிமுகப்படுத்தி விண்ணப்பங்களை வரவேற்கிறார்.
உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) என்ற கருத்து 2020- ம் ஆண்டின் உலகளாவிய முழு அடைப்பின் போது உருவாக்கப்பட்டது. இது உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. ஆரம்பத்தில் மூன்று துறைகளுக்காக தொடங்கப்பட்ட பிஎல்ஐ திட்டம் பின்னர் 2020 நவம்பரில் எஃகு துறையையும் சேர்க்கும் வகையில் நீட்டிக்கப்பட்டது.
எஃகு அமைச்சகத்தின் பிஎல்ஐ ரூ 27,106 கோடி முதலீடு, 14,760 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு மற்றும் 7.90 மில்லியன் டன் ‘ ஸ்பெஷாலிட்டி ஸ்டீல்’ உற்பத்திக்கான மதிப்பீட்டை ஈர்த்துள்ளது. நவம்பர் 2024 நிலவரப்படி, நிறுவனங்கள் ஏற்கனவே ரூ 18,300 கோடி முதலீடு செய்து 8,660 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளன. பங்குபெறும் நிறுவனங்களுடன் எஃகு அமைச்சகம் தொடர்ந்து உரையாடி வருகிறது. கருத்துகளின் அடிப்படையில், அதிக பங்கேற்பை ஈர்க்கும் வகையில் திட்டத்தை மீண்டும் அறிவிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக உணரப்பட்டது.