பெண்களுக்கு அதிகாரமளித்தல், குறிப்பாக கிராமப்புற, பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது என்பது சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக அமையும் என்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். தூய்மையான குடிநீர், துப்புரவு, கல்வி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களில் கிராமப்புற மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் பெண்களின் தலைமைத்துவத்தை மேம்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். பாரம்பரிய கைவினைப் பொருட்கள், ஆன்லைன் வர்த்தகங்கள், உள்ளூர் உற்பத்தி ஆகியவற்றின் முன்முயற்சிகள் மூலம் தற்சார்பு கொண்ட கிராமங்களை உருவாக்கி வரும் பழங்குடியின பெண்களின் தொழில்முனைவு உணர்வை அவர் பாராட்டினார். நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் அதே வேளையில், பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் இந்தப் பெண்கள் தலைமையிலான நிறுவனங்கள் உலகளாவிய சந்தைகளை அடைவதை உறுதி செய்யும் என்று அவர் கூறினார். இதற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.
பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதில் மத்திய அரசின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்த திரு பிர்லா, பெண்களின் தலைமைத்துவம் குறித்த நாட்டின் முற்போக்கான தொலைநோக்குப் பார்வைக்கு, பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் சட்டம் ஒரு சான்றாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
தேசிய மகளிர் ஆணையம் மற்றும் பழங்குடியினர் விவகார அமைச்சகத்துடன் இணைந்து மக்களவை செயலகத்தின் நாடாளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த பஞ்சாயத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு 2.0 என்ற நிகழ்ச்சியில் பேசிய போது மக்களவைத் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.