பாதுகாப்பு கணக்குத் துறையின் (DAD -டிஏடி) கட்டுப்பாட்டாளர்கள் மாநாடு, 2025 ஜூலை 7 முதல் 9-ம் தேதி வரை புது தில்லியில் உள்ள டிஆர்டிஓ பவனில் உள்ள டாக்டர் எஸ்கே கோத்தாரி அரங்கத்தில் நடைபெறுகிறது. 2025் ஜூலை 7-ம் தேதி, பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இந்த மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார். முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சௌகான், கடற்படை, விமானப் படை, ராணுவம் ஆகியவற்றின் தலைமை தளபதிகள், பாதுகாப்புத் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங், நிதி ஆலோசகர் (பாதுகாப்பு சேவைகள்) திரு எஸ் ஜி தஸ்திதர், பாதுகாப்புக் கணக்குகளின் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் டாக்டர் மயங்க் சர்மா உள்ளிட்ட உயர் ராணுவ அதிகாரிகள் இதில் பங்கேற்பார்கள். இந்த மாநாடு இந்தியாவின் பாதுகாப்பு நிதி கட்டமைப்பின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான ஒரு முக்கிய தளமாக அமையும்.
இந்த மாநாடு, பாதுகாப்பு மற்றும் நிதித் துறைகளில் உள்ள பாதுகாப்பு கணக்குத் துறையினர், சம்பந்தப்பட்ட குடிமைப் பணி அதிகாரிகள், கல்வித்துறையினர், சிந்தனையாளர்கள் உள்ளிட்டோரை ஒன்றிணைக்கும். சவால்களை மதிப்பிடுவதற்கும், சீர்திருத்தங்களைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கும், பாதுகாப்புத் தயார்நிலையில் நிதி நிர்வாகத்தின் பங்கை மேம்படுத்துவதற்கும் இது ஒரு முக்கிய தளமாக அமையும்.
இந்த மாநாட்டில் பட்ஜெட், கணக்கு சீர்திருத்தம், உள் தணிக்கை மறுசீரமைப்பு, கூட்டு ஆராய்ச்சி, விலை நிர்ணயத்தில் புதுமை, திறன் மேம்பாடு போன்ற பகுதிகளை உள்ளடக்கிய எட்டு உயர்மட்ட அமர்வுகள் இடம்பெறும். போட்டித்தன்மை வாய்ந்த, தன்னம்பிக்கை கொண்ட பாதுகாப்புத் துறைக்கு நிதி விவேகத்தை சமநிலைப்படுத்துவதில் ஒருங்கிணைந்த நிதி ஆலோசகர்களின் வளர்ந்து வரும் பங்கை இந்த அமர்வுகள் ஆராயும்.
2025-ம் ஆண்டை சீர்திருத்த ஆண்டாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்ததன் படி, இந்த மாநாடு, இந்தியாவின் பாதுகாப்பு நிதி கட்டமைப்பை வலுப்படுத்தும். தற்சார்பு இந்தியா என்ற கொள்கையை முன்னெடுத்துச் செல்வதில் மேலும் சிறந்த செயல்திறன் மிக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து இதில் முக்கிய ஆலோசனைகள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Matribhumi Samachar Tamil

