1905 ஆகஸ்ட் 07 அன்று கொல்கத்தாவில் தொடங்கப்பட்ட சுதேசி இயக்கம், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு முக்கிய தருணமாகும். இது உள்நாட்டு பொருட்கள் மற்றும் உற்பத்தி தொடர்பான மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இயக்கத்தை நினைவு கூறும் விதமாக, 2015-ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 7-ம் தேதி தேசிய கைத்தறி தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
மத்திய ஜவுளி அமைச்சகம் ஆகஸ்ட் 01 முதல் ஆகஸ்ட் 07 வரை ஒரு வாரகால கொண்டாட்டங்களை அறிவித்துள்ளது. இதனையொட்டி, இந்திய அஞ்சல் துறை கைத்தறி துறையுடன் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
V23O.jpg)
நெசவுத்தொழிலை அறிந்துகொள்ளும் பிரச்சாரத்தின் ஒருபகுதியாக 2025 ஆகஸ்ட் 5 அன்று, மத்திய மண்டல அலுவலக பணியாளர்கள் 20 பேர், திருச்சி மாவட்டம் மணமேடு-கோடியாம்பாளையம் ஸ்ரீ மாரியம்மன் சாலியர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தின் கீழ் இயங்கும் கைத்தறி அலகுகளை பார்வையிட்டனர். கும்பகோணம் அஞ்சல் கோட்ட பணியாளர்கள் 30 பேர் திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தின் கீழ் இயங்கும் கைத்தறி அலகுகளை பார்வையிட்டனர். கடலூர் அஞ்சல் கோட்ட பணியாளர்கள் 30 பேர், கடலூர் மாவட்டம் சஞ்சீவிராயன்கோவில் மஹாத்மா காந்தி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கும் கைத்தறி அலகுகளை பார்வையிட்டனர். இந்த நிகழ்வுகளின் போது அஞ்சல் பணியாளர்கள் கைத்தறி பொருட்களின் உற்பத்தி, உற்பத்தி செயல்முறைகள், விற்பனை மற்றும் நெசவாளர்களின் வாழ்வாதாரம் குறித்து அறிந்துகொண்டனர்.
மேலும் கைத்தறி பொருட்களின் தனித்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், திருச்சிராப்பள்ளி துறையூர் தலைமை அஞ்சல் அலுவலக வளாகங்களில் 2025 ஆகஸ்ட் 6 அன்று கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் நடந்த விழாவினை மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் திருமதி தி.நிர்மலா தேவி குத்துவிளக்கேற்றி கண்காட்சியினை பார்வையிட்டு விற்பனையை தொடங்கி வைத்தார். துறையூர் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் நடந்த விழாவினை ஸ்ரீரங்கம் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் திருமதி ஜோஸ்பின் சில்வியா விற்பனையை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில் பொதுமக்கள், அஞ்சல் துறை, கைத்தறி துறை, கதர் கிராம தொழில்கள் துறை பணியாளர்கள் பங்கேற்றனர்.
Matribhumi Samachar Tamil

