மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா 2025 ஜனவரி 07 முதல் 11-ம் தேதி வரை இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, குயெர்ன்சி ஆகிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் சபாநாயகர் ரைட் ஹானரபிள் சர் லிண்ட்சே ஹோய்ல் அழைப்பின் பேரில் திரு பிர்லா 2025 ஜனவரி 07 முதல் 09 வரை இங்கிலாந்து நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் ரைட் ஹானரபிள் சர் லிண்ட்சே ஹோய்ல் மற்றும் லண்டனில் உள்ள பிரபுக்கள் சபையின் லார்ட் சபாநாயகர் அல்க்லூத்தின் ரைட் ஹானரபிள் லார்ட் மெக்ஃபால் ஆகியோரை சந்தித்துப் பேசுவார். லண்டனில் நடைபெறும் இதர நிகழ்ச்சிகளுக்கிடையே, திரு ஓம் பிர்லா டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அருங்காட்சியகத்திற்குச் சென்று பார்வையிடுகிறார். தேசப்பிதா மகாத்மா காந்தியின் சிலைக்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்துவார். இங்கிலாந்தில் உள்ள இந்திய வம்சாவளியினருடனும் அவர் கலந்துரையாடுகிறார்.
திரு பிர்லா ஸ்காட்லாந்து சென்று அந்நாட்டு நாடாளுமன்றத்தின் தலைமை அதிகாரியான ரைட் ஹானரபிள் அலிசன் ஜான்ஸ்டோன், ஸ்காட்லாந்தின் முதலமைச்சர் ரைட் ஹானரபிள் ஜான் ஸ்வின்னி எம்.எஸ்.பி ஆகியோரையும் சந்தித்துப் பேசுகிறார். ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடனும் அவர் கலந்துரையாடுகிறார்.
2025 ஜனவரி 10-ம் தேதி குயெர்ன்சி நகரில் நடைபெறும் சபாநாயகர்கள் மற்றும் தலைமை அதிகாரிகள் மாநாட்டின் நிலைக்குழுக் கூட்டத்திற்கு திரு ஓம் பிர்லா தலைமை தாங்குகிறார். 2026-ம் ஆண்டில் இந்தியாவில் நடைபெறவுள்ள 28-வது காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் தலைமை அதிகாரிகளின் மாநாட்டு புரவலர் என்ற முறையில் தலைமை வகிக்கிறார். இந்தக் கூட்டத்தின் இடையே பிற நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அவர் சந்தித்துப் பேசுகிறார்.