இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தியாக புத்தொழில் நிறுவனங்கள் திகழும் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். பஞ்ச்குலாவில் இன்று (07.12.2025) இந்திய சர்வதேச அறிவியல் விழாவில் தொழில்முனைவோர், மாணவர்கள் ஆகியோருடன் கலந்துரையாடிய அமைச்சர், நிதியுதவி மட்டும் அல்லாமல், அத்துடன் சிறந்த வழிகாட்டுதலே அடுத்த தலைமுறை புத்தொழில் நிறுவனங்களைச் சிறப்பாக வடிவமைக்கும் என்று கூறினார்.
நாட்டில் அறிவியல் கல்விக்கான வாய்ப்புகள் பெருகி இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்தியா வேகமாக முன்னேறி வருவதாகவும், சிறிய நகரங்களில் சாதாரண பின்னணிகளைச் சேர்ந்தவர்களும் சிறந்த தொழில்முனைவோராகும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் கூறினார். வெறும் கொள்கை உருவாக்கம் என்ற நிலையோடு அல்லாமல், புதிய முயற்சிகளை சந்தைகளுடன் இணைக்கும் சூழலை அரசு உருவாக்குகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
நமது புத்தொழில் நிறுவனங்கள் உலக அளவில் போட்டியிட வேண்டுமானால், ஆராய்ச்சியிலும் மேம்பாட்டிலும் அதிக கவனம் செலுத்தி, துணிச்சலாக புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அறிவியல் முன்னேற்றங்கள் இந்தியாவில் மக்களின் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு மாற்றியுள்ளன என்பதை அமைச்சர் எடுத்துரைத்தார். இந்திய சர்வதேச அறிவியல் விழா போன்ற நிகழ்வுகள், கொள்கை வகுப்பாளர்கள், விஞ்ஞானிகள், ஆர்வமுள்ள தொழில்முனைவோர் ஆகியோரை ஒரு பொதுவான தளத்தில் இணைப்பதாக திரு ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.
Matribhumi Samachar Tamil

