சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி மெட்ராஸ்), இந்தியாவிலேயே மிகப் பெரிய அளவில் மாணவர்களால் நடத்தப்படும் வருடாந்திர கலாச்சார விழாவின் 51-வது ஆண்டு சாரங் கொண்டாட்டத்தை 2025 ஜனவரி 9 முதல் 13-ம் தேதி வரை நடத்த தயாராகி வருகிறது. இதில் 80,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘சாரங் 2025’ தென்னிந்தியாவின் கலாச்சார சிறப்புகளை மையப்படுத்தும் கொண்டாட்டமாக இருக்கும்.
பல்வேறு நிகழ்வுகளை கொண்டாதாக அமையும் இந்த விழாவில் ஒவ்வொரு நிகழ்வும் பன்முகத் தன்மைக்கு சான்றாக விளங்குவதுடன் ஒவ்வொரு பார்வையாளருக்கும் உற்சாகத்தை அள்ளித் தரும்.
இது தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறும்போது, இந்த நிறுவன வளாகத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் சாரங் தனித்துவமான ஒன்று என கூறினார். மாணவர்களின் துடிப்பான ஆற்றலையும், படைப்புத்திறனையும் வெளிக்கொணரும் வாய்ப்பை இது வழங்குகிறது என்று குறிப்பிட்டார். இப்படிப்பட்ட நிகழ்வுகள் மாணவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்துவதோடு மட்டுமின்றி, இக்கல்வி நிறுவன வளாகத்தின் பன்முகத்தன்மைக்கு சான்றாகவும் விளங்குகிறது என அவர் தெரிவித்தார்.