இந்திய வேளாண் சூழலில் புரட்சியை ஏற்படுத்தும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணையமைச்சரும் (தனிப்பொறுப்பு) கல்வித்துறை இணையமைச்சருமான திரு ஜெயந்த் சவுத்ரி ஆகியோர் இன்று மீரட்டில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பக் கல்லூரியில் ‘வேளாண் தொழில்நுட்ப புத்தாக்க மையத்தைத்’ திறந்து வைத்தனர். உத்தரப்பிரதேச அரசின் வேளாண் அமைச்சர் திரு சூர்யா பிரதாப் ஷாஹியும் விழாவில் பங்கேற்றார்.
இந்த மையம் ரோப்பர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தால் இயக்கப்படுகிறது. இந்த முயற்சி தொழில்நுட்பத்தை விவசாயத்துடன் இணைப்பதையும், விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதையும், இந்தியாவில் மிகவும் நிலையான மற்றும் முற்போக்கான விவசாய எதிர்காலத்திற்கு வழி வகுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நிகழ்வில், தலைமை விருந்தினராகக் கலந்து கொண்ட மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், இந்த முயற்சியை “சமூகத்திற்கான அறிவியல்” என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று பாராட்டினார். கல்வி, ஆராய்ச்சி மற்றும் அடிமட்ட பயன்பாடுகளில், குறிப்பாக விவசாயத்தில், செயற்கை நுண்ணறிவு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் அமைச்சகத்தின் உறுதிப்பாட்டை அவர் எடுத்துரைத்தார். இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் ஆதரிக்கப்படும் அன்னம் ஏஐ என்ற வேளாண்மைக்கான செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையம் மேற்கொண்ட முயற்சிகளை அவர் பாராட்டினார்.
விழாவில் பேசிய இணையமைச்சர் திரு. ஜெயந்த் சவுத்ரி, வேளாண் தொழில்நுட்பம் சார்ந்த முன்னேற்றத்தின் புதிய சகாப்தத்தை ஏற்றுக்கொள்வதற்கு கிராமப்புற இளைஞர்கள் மற்றும் விவசாயிகளை ஊக்குவிப்பதில் இந்த மையத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலும் தொழில்நுட்பத்துடன் பாரம்பரியத்தை இணைப்பதன் முக்கியத்துவத்தை அமைச்சர் எடுத்துரைத்தார்.
Matribhumi Samachar Tamil

