புதுதில்லியில் உள்ள காவல் துறை ஆராய்ச்சி, மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமை தாங்கினார். மத்திய உள்துறை செயலாளர், காவல் துறை ஆராய்ச்சி, மேம்பாட்டு பணியகத்தின் தலைமை இயக்குநர், உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் பணியகத்தின் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதில் காவல் துறை ஆராய்ச்சி, மேம்பாட்டு பணியகம் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து அவர் ஆய்வு செய்தார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ், தேவையான அறிவுசார், கட்டமைப்பு மற்றும் நிறுவன வளங்களுடன் காவல் துறையினரை தயார்படுத்தவும் காவல், உள்நாட்டுப் பாதுகாப்பின் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் வகையில் இந்திய காவல் படைகளை ஸ்மார்ட் படைகளாக மாற்றவும் காவல் துறை ஆராய்ச்சி, மேம்பாட்டு பணியகம் உறுதிபூண்டுள்ளது என்று உள்துறை அமைச்சர் கூறினார்.
சிறை அதிகாரிகள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் குற்றங்களின் தன்மை குறித்து பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்று கூறிய திரு அமித் ஷா அடித்தள நிலையில் காவல்துறை எதிர்கொள்ளும் சவால்களை அடையாளம் காண காவல் துறை ஆராய்ச்சி, மேம்பாட்டு பணியகம் ஆய்வ செய்ய வேண்டும் என்றும் அவற்றுக்கான தீர்வுகளைக் கண்டறிய பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஆய்வுகள் மற்றும் திட்டங்களில் சர்வதேச புகழ்பெற்ற நிறுவனங்களுடன் ஒத்துழைப்பு உட்பட பல பங்குதாரர்களின் முக்கியத்துவத்தை திரு அமித் ஷா எடுத்துரைத்தார். காவல்துறையினருக்கு அதிகபட்ச பயனை அளிக்கவும், காவல்துறையின் நற்பெயரை மேம்படுத்தவும் இந்தப் பணியகத்தின் திட்டங்கள், ஆய்வுகள், வெளியீடுகளுக்கான உலகளாவிய விரிவாக்க நோக்கத்தையும் அவர் எடுத்துரைத்தார்.