மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், சிறுபான்மையினர் நலத்துறை இணையமைச்சர் திரு ஜார்ஜ் குரியன் 2025 ஜனவரி 9 அன்று, இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் – மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்டபம் மண்டல மையத்தில் கடற்பாசிகளுக்கான சிறப்பு மையத்தை தொடங்கி வைத்தார்.
நாட்டில் கடற்பாசி வளர்ப்பின் முழுமையான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சிறப்பு மையத்தின் பெயர் பலகையையும், கடற்பாசிகளுக்கான ஆலை உற்பத்தி அலகையும் அவர் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து மையத்தில் உள்ள கடற்பாசி செடிகள் உற்பத்தி அலகு, கடல் குஞ்சு பொரிப்பக வளாகம், தேசிய கடல் மீன் குஞ்சு வளர்ப்பு வங்கி, மறுசுழற்சி நீர்வாழ் உயிரின வளர்ப்பு அமைப்பு, கடற்கூண்டு பண்ணை, பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட பச்சை புலி இறால் குஞ்சு பொரிப்பகம், கடல் பல்லுயிர் அருங்காட்சியகம், கடல் நீர்வாழ் உயிரின அரங்கையும் அவர் பார்வையிட்டார்.
பின்னர் அவர் ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள், மீன் வளர்ப்போர், கடற்பாசி வளர்ப்போருடன் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொண்டார். ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு கடலோர கிராமங்களான சம்பை, மாங்காடு, தங்கச்சிமடம், மண்டபம், முனைக்காடு, வெதலை, தொண்டி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் குமரப்பன் வயல் மற்றும் கோட்டைப்பட்டினம் ஆகிய பகுதிகளில் இருந்து மீன், கடற்பாசி மற்றும் சிங்கி இறால் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள 150-க்கும் மேற்பட்ட மீனவ / விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு அமைச்சருடன் கலந்துரையாடினர். கடற்பாசி வளர்ப்பு மற்றும் கூண்டு வளர்ப்பில் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட விவசாயிகள், இத்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் மற்றும் மேம்பாட்டு முயற்சிகளுக்காக மத்திய அரசு, இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் – மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்டபம் மண்டல மையம் மற்றும் தமிழ்நாடு மாநில மீன்வளத் துறைக்கு நன்றி தெரிவித்தனர். அவர்கள் சில பிரச்சினைகள் மற்றும் குறைகளை அமைச்சரிடம் சுட்டிக்காட்டியிருந்தனர். அப்பிரச்சனைகளை தீர்க்க ஆதரவு அளிப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.
விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டத்திற்கு இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் – மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்டபம் மண்டல மைய இயக்குநர் டாக்டர் கிரின்சன் ஜார்ஜ் தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர், நாட்டின் கடல்வாழ் உயிரின வளர்ப்புத் துறையை மேம்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டியதற்காகவும், மண்டபம் மண்டல மையத்தை பார்வையிட்டதற்காகவும் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்காக மண்டபம் மையம் எடுத்த கூட்டு முயற்சிகளையும் அவர் பாராட்டினார். கடற்பாசி திசு வளர்ப்புத் திட்டங்களில் திருச்சிராப்பள்ளியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் – தேசிய வாழை ஆராய்ச்சி மையத்துடன் வலுவான ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான எதிர்காலத் திட்டங்கள் குறித்து அவர் குறிப்பிட்டார்.