தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி 24% பெண்களும் 23% ஆண்களும் அதிக எடை கொண்டவர்களாக அல்லது பருமனாக உள்ளனர். ஆரோக்கியமற்ற உணவு முறைகள், அமர்ந்தே இருக்கும் வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் உடல் பருமன் அதிகரித்து வருவதற்கு முக்கிய பங்களிப்பாகும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிக அளவில் எடுத்துக் கொள்வது, போதுமான உடல் செயல்பாடு இல்லாதது மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவை இந்த வளர்ந்து வரும் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. இது நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களை பாதிக்கிறது.
தொற்றுநோய் அல்லாத நோய்களைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான தேசியத் திட்டத்தின் கீழ் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு, மனித வளங்கள், ஆரம்பகால நோயறிதல், பரிந்துரைகள், சிகிச்சை மற்றும் உடல் பருமன் உள்ளிட்ட விழிப்புணர்வை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குகிறது.
தொற்றுநோய் அல்லாத நோய்களைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான தேசியத் திட்டத்தின் கீழ் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான பின்வரும் நடவடிக்கைகளை இந்திய அரசு ஊக்குவிக்கிறது:
ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள் மூலம் விரிவான ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பின் கீழ் சமூக மட்டத்தில் நல்வாழ்வு நடவடிக்கைகள் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட தகவல் தொடர்புகளை மேம்படுத்துதல் மேற்கொள்ளப்படுகிறது.
ஆயுஷ் அமைச்சகத்தால் யோகா தொடர்பான நடவடிக்கைகள் ஊக்கவிக்கப்படுகின்றன.
அச்சு, மின்னணு மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு உருவாக்கும் நடவடிக்கைகளுக்கு நிதி உதவி.
ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆயுஷமான் ஆரோக்கிய மையங்கள் மூலம் சுகாதார முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சுகாதார பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகளின் போது சர்க்கரை மற்றும் எண்ணெய் உட்கொள்ளலைக் குறைப்பது குறித்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் “சரியான உணவை எடுப்போம்” இந்தியா மற்றும் “இன்றிலிருந்து கொஞ்சம் குறைவாக” போன்ற முயற்சிகள் மூலம் ஆரோக்கியமான உணவை ஊக்குவிக்கிறது. இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் உடல் தகுதி இந்தியா இயக்கம் மற்றும் கேலோ இந்தியா போன்ற பிரச்சாரங்கள் மூலம் மக்களிடையே உடல் செயல்பாடு மற்றும் உடற்தகுதியை ஊக்குவிக்கிறது. ஆயுஷ் அமைச்சகம் சமூக மட்டத்தில் பல்வேறு யோகா சார்ந்த செயல்பாடுகள் மூலம் நல்வாழ்வு மற்றும் தடுப்பு ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது.
சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் வாழ்க்கைச் சுழற்சி அணுகுமுறையில் இனப்பெருக்கம், மகப்பேறு, சிசு, குழந்தைகள், இளம் பருவ சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து உத்தியை செயல்படுத்துகிறது, இதில் நாடு முழுவதும் உடல் பருமன் உட்பட பெண்களிடையே ஊட்டச்சத்து பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கான தலையீடுகள் அடங்கும்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வ பதிலில் இதைத் தெரிவித்தார்.
Matribhumi Samachar Tamil

