குளிர்காலத்தின் முடிவையும் வெப்பமான நாட்களின் தொடக்கத்தையும் குறிக்கும் பண்டிகையான மகர சங்கராந்தியின் விடியல் நெருங்கியபோது, பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கத்தின் கரைகள் தெய்வீக மகிமையின் காட்சியாக மாறியது. மகா கும்பமேளா 2025-ன் முதல் அமிர்த ஸ்னானம் (புனித நீராடல்) மகர சங்கராந்தியில் தொடங்கியது.
கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகியவற்றின் புனித சங்கமத்தில் பல லட்சக்கணக்கான பக்தர்களை புனிதர்களையும் அது ஈர்த்தது. அவர்கள் குளிரையும் பொருட்படுத்தாமல் புனித நீராடினர். முதல் அமிர்தக் குளியலின் போது 3.5 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித சங்கத்தில் நீராடினர், முதல் இரண்டு நாட்களில் மொத்த பக்தர்களின் எண்ணிக்கை 5 கோடிக்கு மேல் அதிகரித்தது.
பக்தர்கள் புனித நீராடும் போது வளம் பெருக பிரார்த்தனை செய்தனர். மகர சங்கராந்தி சூரிய பகவானுக்கு அர்ப்பணிக்கப்படுவதால், பலர் சூரியனுக்கு அர்க்யத்தை வழங்கினர். புனித நீராடலுக்குப் பிறகு, பக்தர்கள் சடங்குகளைச் செய்து, படித்துறைகளில் பிரார்த்தனை செய்தனர்.
மகா கும்பமேளா என்பது சாதாரண விழா அல்ல. திரிவேணி சங்கமத்தின் கரைகளை நம்பிக்கை, தெய்வீகத்தின் அம்சமாக மாற்றும் ஒரு நிகழ்வு இது. பிரம்ம முகூர்த்தத்திலிருந்து, சூரிய ஒளியின் முதல் கதிர்கள் தண்ணீரைத் தொட்டதில் இருந்து, இரவின் வருகை வரை, பக்தர்களின் இடைவிடாத நீராடல் இருந்தது. ஒவ்வொருவரும் புனித நீராடலின் மூலம் ஆசீர்வாதங்களைத் தேடினர். கூட்டு பக்தியின் வெப்பத்துக்கு முன்னால் ஜனவரி மாதக் குளிர் அற்பமாகத் தோன்றியது.
இது இந்திய கலாச்சாரத்தின் நீடித்த மதிப்புகளுக்கு ஒரு வாழும் சான்றாக உள்ளது. பயபக்தி, கடமை ஒற்றுமை ஆகியவற்றின் கலவையாகும் இது.
வேற்றுமைகளுக்கு இடையேயான ஒற்றுமை மகா கும்பமேளாவின் மிக ஆழமான அம்சங்களில் ஒன்றாகும். இங்குதான் இந்தியாவின் கலாச்சார ஆன்மீக பாரம்பரியம் உயிர்ப்பிக்கப்படுகிறது. சனாதன பாரம்பரியத்தின் காவிக் கொடிகள் மூவர்ணக் கொடியுடன் பறக்கின்றன. இது நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டைக் குறிக்கிறது.
அரசு நிர்வாகத்தின் உன்னிப்பான திட்டமிடல் மகா கும்பமேளா அமைதியாகவும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்துள்ளது.
நாள் முடியும் தருவாயில் சங்கமத்தின் கரைகள் சுறுசுறுப்பாக இருந்தன. யாத்ரீகர்கள் தீபங்களை ஏற்றி ஆற்றில் மிதக்க விட்டனர். ஒளிரும் தீப்பிழம்புகள் நம்பிக்கை, பிரார்த்தனைகளின் அடையாளமாக தெய்வீகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகளின் சங்கமம் அந்தி வெளிச்சத்தில் ஜொலித்தது.