புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி),தேசத்திற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றிய 150 ஆண்டுகளைக் கொண்டாடி ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. 1875-ம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த ஐஎம்டி, முக்கியமான வானிலை, பருவநிலை சேவைகளை வழங்குவதில் முன்னணியில் உள்ளது. பேரிடர் மேலாண்மை, விவசாயம், விமானப் போக்குவரத்து, பொது பாதுகாப்பு ஆகியவற்றில் இத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவின் தேசிய வானிலை சேவை என்ற வகையில், வானிலை ஆய்வு, நில அதிர்வு அதனுடன் தொடர்புடைய துறைகளில் இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னணியில் உள்ளது. உயிர்களைப் பாதுகாப்பதிலும், பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதிலும், சமூக நலனுக்காக அறிவியல் ஆராய்ச்சியை முன்னேற்றுவதிலும் இது ஒருங்கிணைந்த பங்கு வகிக்கிறது.
150 ஆண்டுகளில் ஐஎம்டி:
புதுதில்லி பாரத் மண்டபத்தில் 2025 ஜனவரி 14 அன்று நடைபெற்ற இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150-வது நிறுவன தின கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் குறிப்பிடத்தக்க பயணத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், அதன் 150 ஆண்டு பாரம்பரியம் நவீன அறிவியல், தொழில்நுட்பத்தில் இந்தியாவின் முன்னேற்றத்தை குறிக்கிறது என்று குறிப்பிட்டார். இந்தியாவை
அனைத்து வானிலைக்கும் தயாரான, பருநிலைத் தகவல் கணிப்பில் முன்னணி நாடாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ‘மிஷன் மௌசம்’ என்ற வானிலை இயக்க முன்முயற்சியையும் அவர் தொடங்கி வைத்தார். ஐஎம்டி விஷன் -2047 ஆவணத்தை வெளியிட்டதோடு, நினைவு அஞ்சல் தலையையும் நாணயத்தையும் பிரதமர் வெளியிட்டார்.
ஐஎம்டி- தோற்றம், முக்கியத்துவம்:
மையப்படுத்தப்பட்ட வானிலை சேவைகளின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய தொடர்ச்சியான பேரழிவு நிகழ்வுகளைத் தொடர்ந்து 1875-ம் ஆண்டில் இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) நிறுவப்பட்டது. இவற்றில், 1864-ம் ஆண்டில் ஒரு பேரிடர் வெப்பமண்டல சூறாவளி கல்கத்தாவைத் தாக்கியது. அதைத் தொடர்ந்து 1866, 1871-ம் ஆண்டுகளில் பருவமழை பொய்த்தது. இவை இந்திய துணைக் கண்டத்தின் தீவிர வானிலை பாதிப்புகளை எடுத்துக்காட்டுகிறது.
ஐஎம்டி-யின் ஸ்தாபனம் இந்தியாவில் வானிலை அறிவியலின் வளர்ச்சியில் ஒரு முக்கிய தருணத்தைக் குறித்தது. அனைத்து வானிலை ஆய்வுப் பணிகளையும் ஒரு ஒருங்கிணைந்த மையத்தின் கீழ் இது கொண்டு வந்தது. இயற்கைப் பேரிடர்களின் தாக்கத்தைத் தணிப்பதற்கும், விவசாயம், நீர் மேலாண்மை, விமானப் போக்குவரத்து, பிற துறைகளை ஆதரிப்பதற்கும், இந்தியாவின் பரந்த பிராந்திய சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதற்கும் ஐஎம்டி-யின் சேவைகள் முக்கியமாக உள்ளன.
ஐஎம்டி -சாதனைகள், முன்னேற்றங்கள்:
ஐஎம்டி அதன் தொடக்கத்திலிருந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது.
*ஒட்டுமொத்த முன்னறிவிப்பு துல்லியம் 2014ம் ஆண்டில் சதவீதத்துடன் ஒப்பிடும்போது 2023-ல் 40% முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.
*டாப்ளர் வானிலை ரேடார் (DWR) கட்டமைப்பு 2014-ல் 15-லிருந்து 2023-ல் 39 ஆக விரிவுபடுத்தப்பட்டது.
*2014-ல் 1350-ஆக இருந்த தானியங்கி மழைமானிகளின் எண்ணிக்கை 2023-ல் 1382-ஆக அதிகரித்துள்ளது.
*மாவட்ட வாரியான மழை கண்காணிப்பு திட்ட (DRMS)நிலையங்களின் எண்ணிக்கை 2014- 3955 ஆக இருந்த நிலையில் 2023-ல் 5896 ஆக அதிகரித்துள்ளது.
ஐஎம்டி தனது 150 வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் நிலையில், அதன் மரபு முக்கியமானது. முன்னோடி வானிலை ஆராய்ச்சி முதல் அதிநவீன தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது வரை, ஐஎம்டி தொடர்ந்து முன்னேறி வருகிறது. ஐஎம்டி நாட்டின் முன்னேற்றத்துக்கு முக்கியப் பங்களித்து வருகிறது.