கட்டடம், பிற கட்டுமானத் தொழிலாளர்களுக்கான (BoCW) நலத்திட்டங்கள் தொடர்பான 16-வது கண்காணிப்புக் குழுக் கூட்டம்’ தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளர் திருமதி சுமிதா தவ்ரா தலைமையில் நேற்று (13 ஜனவரி 2025) நேரடியாகவும் காணொலி முறையிலும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை தலைமை இயக்குநர், அமைச்சகத்தின் பிற மூத்த அதிகாரிகள், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் கூடுதல் தலைமைச் செயலாளர் / முதன்மைச் செயலாளர்கள் / தொழிலாளர் நல ஆணையர்கள், தொழிலாளர் நல வாரியங்களின் செயலாளர்கள், தேசிய சுகாதார ஆணையம், நிதிச் சேவைகள் துறையின் பிரதிநிதிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மத்திய அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட கட்டட தொழிலாளர்களுக்கான பலன்கள், இஷ்ரம் தளத்தில் அவர்களை இணைத்தல், அரசுத் திட்டப் பலன்களை அவர்களுக்கு நேரடியாக வழங்குவது போன்றவெ குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கட்டுமானத் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பை விரிவுபடுத்துவதற்காக செஸ் வரி நிதியைப் பயன்படுத்த மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை செயலாளர் வலியுறுத்தினார். தற்போது நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கட்டட தொழிலாளர் நல வாரியங்களில் சுமார் 5.73 கோடி தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
சுகாதாரம், குடும்ப நல அமைச்சகத்தின் செயலாளர் திருமதி புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவாவும் கூட்டத்தில் பங்கேற்று, கட்டுமானத் தொழிலாளர்களிடையே காசநோயை ஒழிப்பது குறித்து எடுத்துரைத்தார்.