மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகமானது உத்தரப்பிரதேச மாநிலம் படாவுனில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் பிரதமரின் 75-வது மாற்றுத்திறனாளி சேவை மையத்தைத் திறந்து வைக்கவுள்ளது, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு அதிகாரம் அளிக்கும் நாடு தழுவிய முயற்சியின் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிப்பதாக இது உள்ளது.
இந்த நிகழ்ச்சியில், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு. பி. எல். வர்மா, அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், இந்திய செயற்கை மூட்டுகள் உற்பத்தி நிறுவனம், மாவட்ட நிர்வாக அமைப்பின் பிரதிநிதிகள் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.
தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு மதிப்பீடு, கணக்கீடு, ஆலோசனை, விநியோகம் மற்றும் விநியோகத்திற்குப் பிந்தைய பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு ஒருங்கிணைந்த சேவைகளை ஒரே இடத்தில் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட தனித்துவ முயற்சியே பிரதமரின் மாற்றுத்திறனாளி சேவை மையம் ஆகும். இந்த மையங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் கீழ் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனமான இந்திய செயற்கை மூட்டுகள் உற்பத்தி நிறுவனம் வாயிலாக நிறுவப்படுகின்றன.
படாவுனில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பிரதமரின் மாற்றுத்திறனாளி சேவை மையம், மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்யும் திட்டம் மற்றும் மத்திய அரசின் மூத்த குடிமக்களுக்கான உதவித் திட்டம் ஆகியவற்றின் கீழ் உதவிகள் மற்றும் உபகரணங்களை வழங்கும். தகுதியுள்ள பயனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள், சக்கர நாற்காலிகள், காது கேட்கும் கருவிகள், நடைபயிற்சி கருவிகள், செயற்கை கால்கள் மற்றும் உடல் இயக்கத்திற்கான ஆதரவு பாகங்கள் போன்ற சாதனங்கள் இலவசமாக வழங்கப்படும்.
இந்த மையம் தொடங்கப்பட்டதன் மூலம், நாடு முழுவதும் செயல்படும் பிரதமரின் மாற்றுத்திறனாளி சேவை மையங்களின் மொத்த எண்ணிக்கை 75 – ஐ எட்டியுள்ளது. மேலும், இந்த முயற்சியில் ஏற்கனவே 179.15 லட்ச ரூபாய்க்கும் கூடுதலான மதிப்புள்ள சாதனங்களை 1.40 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு வழங்கியுள்ளது.
இந்த மையம் உள்ளூர் பயனாளிகள் எதிர்கொள்ளும் பயணம் மற்றும் போக்குவரத்தில் உள்ள சவால்களை கணிசமாகக் குறைப்பதுடன், பிராந்திய அளவில் அவர்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடிய, கண்ணியமான சேவைகளை உரிய தருணத்தில் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி, ‘அணுகக்கூடிய இந்தியா, அதிகாரமளிக்கப்பட்ட இந்தியா’ மீதான மத்திய அரசின் வலுவான அர்ப்பணிப்பையும், தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சேவை வழங்குவதன் மூலம் வளர்ச்சிக்கான அதன் தொலைநோக்குப் பார்வையையும் பூர்த்தி செய்யும் வகையில் அமைகிறது.
Matribhumi Samachar Tamil

