கர்நாடகாவின் பெலகாவி மாவட்டம் அதானியில் மராட்டிய மன்னரான சத்ரபதி சிவாஜி மகாராஜின் 25 அடி உயர சிலையை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா இன்று (14.12.2025) திறந்து வைத்தார். இந்த நிகழ்வு வரலாற்றுச் சிறப்புமிக்கது என அவர் கூறினார். இது வெறும் சிலை திறப்பு விழா மட்டுமல்ல என்றும் இந்தியாவின் சுயமரியாதை, துணிச்சல் ஆகிய உணர்வுகளை எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்வதற்கான ஒரு விழா என்றும் கூறினார்.
“ஜெய் பவானி, ஜெய் சிவாஜி” என்ற முழக்கம் இன்றும் கூட ஒவ்வொரு இந்தியரிடமும் அச்சமின்மை, தேசிய கடமை உணர்வைத் தூண்டி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
சத்ரபதி சிவாஜி மகாராஜின் வாழ்க்கையையும் போராட்டங்களையும் அவர் நினைவு கூர்ந்தார். சிவாஜி மகாராஜின் வீரத்திற்கு பெலகாவி பகுதியும் அதானி நிலமும் ஒரு சாட்சியாக இருந்துள்ளது என்று அவர் எடுத்துரைத்தார். பெலகாவி மண்ணில், வீரம், சுயமரியாதை ஆகியவற்றின் அழியாத சரித்திரம் நிலைப்பெற்றுள்ளது என்று அவர் கூறினார். சிவாஜி மகாராஜால் ஈர்க்கப்பட்டு நவீன இந்தியா முன்னேறுகிறது என்று அவர் குறிப்பிட்டார். இந்த சிலை வருங்கால சந்ததியினரை தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று திரு ஜோதிராதித்ய சிந்தியா கூறினார்.
Matribhumi Samachar Tamil

