ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் இன்று (14.12.2025) யூத பண்டிகையான ஹனுக்காவின் முதல் நாள் கொண்டாடப்பட்ட நிலையில் அங்கு மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த துயர சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ள திரு நரேந்திர மோடி, தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு இந்திய மக்கள் சார்பாக மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். ஆழ்ந்த துயரமான இந்த நேரத்தில் ஆஸ்திரேலிய மக்களுக்கு இந்தியா முழு ஆதரவு அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
இந்தப் பிரச்சனையில் இந்தியாவின் அசைக்க முடியாத நிலைப்பாட்டை மீண்டும் எடுத்துரைத்துள்ள பிரதமர், பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்றும், பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும், வெளிப்பாடுகளுக்கும் எதிரான உலகளாவிய போராட்டத்தை இந்தியா உறுதியாக ஆதரிக்கிறது என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“யூத பண்டிகையான ஹனுக்கா பண்டிகையின் முதல் நாளைக் கொண்டாடிய மக்களை குறிவைத்து ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் இன்று நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு இந்திய மக்களின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் ஆஸ்திரேலிய மக்களுடன் இந்தியா நிற்கிறது. பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் வெளிப்பாடுகளுக்கும் எதிரான போராட்டத்தை இந்தியா ஆதரிக்கிறது.”
Matribhumi Samachar Tamil

