Friday, January 09 2026 | 02:11:10 AM
Breaking News

கேதார்நாத் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்து – தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்

Connect us on:

ஆர்யன் ஏவியேஷன் நிறுவனம் கேதார்நாத்துக்கு இயக்கிய பெல் 407 ஹெலிகாப்டர் (பதிவு விடி-பிகேஏ) இன்று (15.06.2025) ஒரு துயர விபத்தில் சிக்கியது. அதில் ஐந்து பயணிகள், ஒரு குழந்தை, ஒரு பணியாளர் ஆகியோர் பயணித்தனர்.

ஹெலிகாப்டர் குப்த்காஷியில் இருந்து காலை 05:10 மணிக்கு புறப்பட்டு, ஸ்ரீ கேதார்நாத் ஜி ஹெலிபேடில் காலை 05:18 மணிக்கு தரையிறங்கியது. அது மீண்டும் காலை 05:19 மணிக்கு குப்த்காஷிக்கு புறப்பட்டது. ஆனால் அந்த ஹெலிகாப்டர் காலை 05:30–05:45 மணிக்கு இடையில் கௌரிகுண்ட் அருகே விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.

பள்ளத்தாக்கு நுழைவுப் பகுதியில் மோசமான வானிலை, அதிக மேகமூட்டம் ஆகியவை நிலவியதால் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. விமான விபத்து புலனாய்வு அலிவலகம் (AAIB-ஏஏஐபி) இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறியும்.

விபத்து நடந்த இடத்தில் தேசிய பேரிடர் மீட்பு மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுக்களின் மீட்பு நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சம்பவத்தைத் தொடர்ந்து, உத்தரகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி காலை 11:00 மணிக்கு ஒரு உயர் நிலை ஆலோசனைக் குழுக் கூட்டத்தை நடத்தினார். இதில் உத்தராகண்ட் அரசின் மூத்த அதிகாரிகள், விமானப் போக்குவரத்துத் துறைச் செயலாளர், விமானப் போக்குவரத்து இயக்குநரக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விபத்தை அடுத்து பின்வரும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன:

* சார் தாம் யாத்திரைக்கான விமானப் போக்குவரத்து நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளன.

* மேலும் இரண்டு ஹெலிகாப்டர்கள் இதேபோன்ற மோசமான வானிலை நிலைமைகளின் கீழ் வான்வழியாக பறந்தது கண்டறியப்பட்டது. அதையடுத்து, அந்த இரு விமானிகளின் உரிமங்களும் ஆறு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

* பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இப்பகுதியில் உள்ள அனைத்து சார்ட்டர், ஷட்டில் ஹெலிகாப்டர் செயல்பாடுகளும் 2025 ஜூன் 15, 16 தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

* சேவைகள் மீண்டும் தொடங்குவதற்கு முன்பு அனைத்து நிறுவனங்களுடனும், விமானிகளுடனும் ஆலோசித்து விரிவான ஆய்வை நடத்த உத்தராகண்ட் சிவில் விமானப் போக்குவரத்து மேம்பாட்டு ஆணையமான யுசிஏடிஏ-வுக்கு (UCADA) உத்தரவிடப்பட்டுள்ளது.

* செயல்பாடுகளைக் கண்காணிக்கவும், ஏதேனும் ஆபத்துகள் தெரிந்தால் உடனடியாக ஆதரவு வழங்குவதை  உறுதி செய்யவும் யுசிஏடிஏ, ஒரு பிரத்யேக கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறையை நிறுவவுள்ளது.

* கேதார்நாத் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து ஹெலிகாப்டர் செயல்பாடுகளையும் தீவிரமாக மேற்பார்வையிடவும், யுசிஏடிஏ கட்டுப்பாட்டு அறையின் செயல்பாட்டை ஆய்வு செய்யவும், அதிகாரிகளை உடனடியாக நியமிக்குமாறு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

விமானப் பாதுகாப்பு குறித்து சமரசத்துக்கு இடமில்லை என்றும், வானிலை தொடர்பான அல்லது பிற நெறிமுறைகளை மீறி எந்தவொரு நிறுவனமும் விமானங்களையோ ஹெலிகாப்டர்களையோ இயக்கக்கூடாது என்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மனித உயிரின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, அனைத்து விதிகளும் முழுமையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்துக்கு, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

About Matribhumi Samachar

Check Also

ஏரோநாட்டிக்கல் மேம்பாட்டு முகமையின் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு பெங்களூரில் தொடங்கியது

விமானப்படை மேம்பாட்டு முகமையான ஏடிஏ (ADA) ஏற்பாடு செய்துள்ள இரண்டு நாள் தேசிய கருத்தரங்கான ‘ஏரோநாட்டிக்ஸ் 2047’, இன்று (ஜனவரி …