Sunday, December 07 2025 | 08:31:55 PM
Breaking News

வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் உதவியுடன் தமிழ்நாட்டிலிருந்து விஷ வெள்ளரிக்காய் உருகுவே நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது

Connect us on:

இந்தியாவின் வேளாண் பொருட்கள் ஏற்றுமதியை வலுப்படுத்தும் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, தமிழ்நாட்டில் பயிரிடப்பட்ட விஷ வெள்ளரிக்காய், மத்திய தொழில் வர்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் உதவியுடன் வெற்றிகரமாக உருகுவே நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஏற்றுமதி தொகுப்பில் இரண்டு முக்கிய விஷ வெள்ளரிக்காய் பொருட்கள் அடங்கியுள்ளன. ஒன்று ஊறுகாய் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் முழுமையான விஷ வெள்ளரிக்காய்கள். மற்றொன்று பர்கர், பீசா, சாண்ட்விச் ஆகியவற்றில் சேர்ப்பதற்கான விஷ வெள்ளரிக்காய் துண்டுகள்.  தமிழ்நாட்டின் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் இணைந்து குத்தகை விவசாயம் மூலம் இந்த விஷ வெள்ளரிக்காய்கள் பயிரிடப்பட்டன. விளை நிலத்திலிருந்து நேரடியாக உலக சந்தைக்கு என்ற வழங்கல் தொடரை இந்த ஏற்றுமதி வெளிப்படுத்துகிறது.

இந்த முன்முயற்சி ஆண்டுக்கு இரண்டாயிரத்திற்கும் அதிகமான விவசாயிகளுக்கு நேரடியாக உதவி செய்வது, அவர்களின் சமூகப் பொருளாதார நிலையில் கணிசமானத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும், 2,500-க்கும் அதிகமான கிராமப்புற குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தையும், வருவாய் அதிகரிப்பையும் ஏற்படுத்தி பயனளிக்கிறது. குறிப்பிடத்தக்க வகையில் இத்தகைய வேளாண் பணிகளில் ஈடுபடுவோரில் எழுபது சதவீதம் பேர் பெண்களாக உள்ளனர். இதன் மூலம் குறிபிடத்தக்க அளவில் கிராமப்புறப் பெண்களும், அவர்களின் குடும்பங்களும் சமூகப் பொருளாதார பலன்களை அடைகின்றனர்.

இந்த முன்முயற்சி இந்தியாவின் வேளாண் உற்பத்திப் பொருட்களை உலக சந்தைக்கு அனுப்புவது மட்டுமின்றி, ஊரக வளர்ச்சிக்கும் பங்களிப்பு செய்கிறது. முன்கூட்டிய ஒப்பந்த விலை அடிப்படையில் உற்பத்திப் பொருட்கள் கொள்முதல் செய்யப்படுவதால் மாறுபடும் சந்தை விலையிலிருந்து விவசாயிகள் பாதுகாக்கப்படுகின்றனர். சர்வதேச சந்தைகளுக்கு விளை பொருட்கள் அனுப்பப்படுவதால் சிறு, குறு விவசாயிகளுக்கு வருவாய் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. அறுவடை, தரம் பிரித்தல், பேக்கேஜிங் போன்ற துறைகளில் ஊரக வேலைவாய்ப்பு உருவாக்கப்படுகிறது.

ஏற்றுமதிக்காக விஷ வெள்ளரிக்காய் கொண்டு செல்லும் சரக்குப் பெட்டக வாகனத்தை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பத்திரிகை தகவல் அலுவலக தென்மண்டல தலைமை இயக்குநர் பொறுப்பு வகிக்கும் திரு வி. பழனிச்சாமி, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய உதவி பொது மேலாளரும், மண்டல தலைவருமான திருமதி சோபனா குமார், சேலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூத்த மண்டல மேலாளர் திரு விக்ரம் சேத், தர்மபுரி இந்தியன் வங்கி மண்டல மேலாளர் திரு கோவிந்த ராஜூ, சென்னை பத்திரிகை தகவல் அலுவலக இயக்குநர் திரு அருண்குமார் ஆகியோர் கொடியசைத்து அனுப்பிவைத்தனர்.

About Matribhumi Samachar

Check Also

குஜராத்தின் ஏக்தா நகரில் தேசிய பாதயாத்திரையின் நிறைவு விழாவில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்

குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (6.12.2025) குஜராத்தின் ஏக்தா நகரில் உள்ள ஒற்றுமை சிலையில் சர்தார் @150 ஒற்றுமை அணிவகுப்பு – தேசிய பாதயாத்திரையின் நிறைவு விழாவில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், இந்த வரலாற்று சிறப்புமிக்க தேசிய பாதயாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியில்  பங்கேற்பது மிகுந்த கவுரமானது என்று கூறினார். நவம்பர் 26-ம் தேதி அரசியல் சாசன தினத்தன்று தொடங்கிய பாதயாத்திரையின் முக்கியத்துவத்தை அவர் விளக்கினார்.  1,300- க்கும் …