புதுதில்லியில் இன்று (16.11.2025) நடைபெற்ற 2024-ம் ஆண்டுக்கான மனோரமா நியூஸ் நியூஸ்மேக்கர் விருது வழங்கும் விழாவில் குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு, மத்திய சுற்றுலா, பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை இணையமைச்சரும் புகழ்பெற்ற திரைப்பட நடிகருமான திரு சுரேஷ் கோபிக்கு இந்த மதிப்புமிக்க விருதை வழங்கினார்.
குடியரசு துணைத் தலைவர் தமது உரையில், சினிமா, அரசியல் ஆகிய இரண்டிலும் உள்ள தனித்துவமான சவால்களை எடுத்துரைத்தார். இந்த இரு துறைகளிலுமே திரு சுரேஷ் கோபி பெற்றுள்ள சிறந்த வெற்றியை அவர் பாராட்டினார்.
இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் நாட்டில் நேர்மறையான தகவல்களை முன்னிலைப்படுத்துவதில் ஊடகங்களின் முக்கிய பங்கை அவர் எடுத்துரைத்தார். மேலும் குரலற்றவர்களுக்கு குரல் கொடுப்பதில் பத்திரிகைகளின் பொறுப்பையும் அவர் வலியுறுத்தினார். விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவதில் ஊடகங்களின் முக்கிய பங்கை அவர் எடுத்துரைத்தார். இந்த செயற்கை நுண்ணறிவு யுகத்தில், உண்மையிலிருந்து போலிச் செய்திகளைப் பிரிப்பது மிகவும் கடினமாகி வருவதாக அவர் மேலும் கூறினார். நமது ஜனநாயகத்தில் பத்திரிகைகளும் ஊடகங்களும் மிகவும் பொறுப்பான பங்கை வகிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தூய்மையான இதயத்துடன் உண்மையைப் பேசுபவர்கள், வாழ்நாள் முழுவதும் தவம் செய்பவர்களை விடவும், தர்மங்களைச் செய்பவர்களை விடவும் உயர்ந்தவர்கள் என்று கூறிய திருவள்ளுவரின் திருக்குறள் கருத்துகளை குடியரசு துணைத் தலைவர் நினைவு கூர்ந்தார். திருவள்ளுவரின் காலத்தால் அழியாத இந்த தத்துவத்தைப் பின்பற்றுமாறு பத்திரிகைகளை அவர் கேட்டுக் கொண்டார்.
மனோரமா குழுமத்தின் நீடித்த பாரம்பரியத்தை எடுத்துரைத்த திரு சி பி ராதாகிருஷ்ணன், உண்மை, மொழிப் பற்று, கலாச்சாரம் ஆகியவற்றின் மீதான அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும், மலையாள மொழிக்கான அதன் பங்களிப்புகளையும் பாராட்டினார்.
Matribhumi Samachar Tamil

