ரயில்வே, தகவல் ஒலிபரப்பு, மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளுக்கான அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் இன்று (17.06.2025) ஹரியானாவின் மானேசரில் உள்ள மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நாட்டின் மிகப்பெரிய வாகன பன்னோக்கு சரக்குப் போக்குவரத்து முனையத்தை திறந்து வைத்தார்.
மானேசரில் உள்ள மாருதி சுசுகியின் ஆலையில் உள்ள இந்த முனையம், வாகனப் போக்குவரத்தில் சரக்குப் போக்குவரத்துத் திறனை கணிசமாக மேம்படுத்தும். இந்த முனையம் மானேசரிலிருந்து 10 கிலோ மீட்டர் பிரத்யேக இணைப்பு மூலம் பட்லி ரயில் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, இது ஹரியானா ரயில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தால் (HRIDC) உருவாக்கப்பட்டு வரும் 121.7 கிலோ மீட்டர் ரயில் வழித்தடத்தின் ஒரு பகுதியாகும்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர், கடந்த 11 ஆண்டுகளில் இந்திய ரயில்வே அடைந்துள்ள குறிப்பிடத்தக்க மாற்றத்தை எடுத்துரைத்தார். 2014-ம் ஆண்டுக்கு முன்பு, ரயில்வே துறைக்கான ஆண்டு பட்ஜெட் சுமார் ₹24,000 முதல் ₹25,000 கோடியாக இருந்தது எனவும் இப்போது, அது ₹2.5 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
பயணிகள் ரயில் சேவையும் சரக்கு போக்குவரத்து சேவையும் பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 2023–24-ம் நிதியாண்டில், ரயில்வே மூலம் மக்கள் சுமார் 720 கோடி பயணங்களை மேற்கொண்டுள்ளதாக அவர் கூறினார். அதே ஆண்டில் ரயில்வே 1,617 மில்லியன் டன் சரக்குகளையும் கையாண்டு உள்ளதாக அவர் தெரிவித்தார். இது உலக அளவில் இரண்டாவது மிக உயர்ந்த சரக்குப் போக்குவரத்து அளவு என அவர் குறிப்பிட்டார்.
பயணிகளின் வசதி குறித்துப் பேசிய அவர், தட்கல் பயணச்சீட்டு முன்பதிவில் குறிப்பிடத்தக்க சீர்திருத்தம் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக தெரிவித்தார். இந்த சீர்திருத்த நடவடிக்கை உண்மையிலேயே தேவையான பயணிகளுக்கு பயணச் சீட்டுகள் கிடைப்பதை உறுதி செய்ய உதவும் என்று திரு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ஹரியானா முதலமைச்சர் திரு நயாப் சிங் சைனி; ஹரியானா அரசின் தொழில்துறை அமைச்சர் திரு ராவ் நர்பீர் சிங்; மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு ஹிசாஷி தகேயுச்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Matribhumi Samachar Tamil

