தெலுங்கானா மாநிலம் ஐதராபாதில் உள்ள ராமோஜி திரைப்பட நகரில் இன்று நடைபெற்ற 2025-ஆம் ஆண்டுக்கான முதலாவது ராமோஜி சிறப்பு விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார்.
ராமோஜி சிறப்பு விருதுகள் ஏழு பிரிவுகளில் வழங்கப்பட்டன: கிராமப்புற மேம்பாடு – திருமதி அம்லா அசோக் ருயா; இளைஞர் அடையாளம் – திரு ஸ்ரீகாந்த் பொல்லா; அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் – பேராசிரியர் மாதவி லதா கலி; மனிதகுல சேவை – திரு ஆகாஷ் டாண்டன்; கலை மற்றும் கலாச்சாரம் – பேராசிரியர் சதுபதி பிரசன்னா ஸ்ரீ; இதழியல் – திரு ஜெய்தீப் ஹர்திகர்; பெண் சாதனையாளர் – திருமதி பல்லபி கோஷ்.
ராமோஜி குழுமத்தின் நிறுவனர் தினம் மற்றும் அதன் நிறுவனர் திரு ராமோஜி ராவ் பிறந்தநாளுடன் இணைந்து நடைபெறும் முதலாவது ராமோஜி சிறப்பு விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வது கெளரவமிக்கது, பெருமைக்குரியது என்று குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தமது உரையில் குறிப்பிட்டார்.
திரு ராமோஜி ராவ் தொலைநோக்குப் பார்வை கொண்டவர், கருத்துக்களை நிறுவனங்களாகவும் கனவுகளை நீடித்த எதார்த்தங்களாகவும் மாற்றியவர். ஊடகங்கள் மற்றும் தகவல் தொடர்புத் துறையில் முன்னோடியாக மட்டுமின்றி, தகவல், படைப்பாற்றல் மற்றும் நிறுவனங்களின் சக்தியில் ஆழமாக நம்பிக்கை கொண்ட ஒரு தேசத்தைக் கட்டமைத்தவர் என்று அவர் கூறினார்.
ஈநாடு முதல் ராமோஜி திரைப்பட நகர் வரை, ஈடிவி நெட்வொர்க்கிலிருந்து ஏராளமான பிற முயற்சிகள் வரை திரு ராமோஜி ராவின் பணி இந்திய இதழியல், பொழுதுபோக்கு, தொழில்முனைவு ஆகியவற்றில் புரட்சியை ஏற்படுத்தியது என்பதைக் குடியரசு துணைத்தலைவர் எடுத்துரைத்தார். உண்மை, நெறிமுறைகள், சிறப்புத் தன்மை ஆகியவற்றில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு நாடு முழுவதும் உள்ள தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று அவர் கூறினார்.
ராமோஜி சிறப்பு விருதுகள் தொடங்கப்பட்டிருப்பது, சிறப்பை வெளிப்படுத்தும், மற்றவர்களை ஊக்குவிக்கும், சமூகத்திற்கு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை கௌரவிக்கும் மெச்சத்தக்க மரபுக்கு ஒரு பொருத்தமான அஞ்சலி என்றும் அவர் கூறினார்.
விருது பெற்ற அனைவரையும் பாராட்டிய அவர், அவர்களை சிறந்து விளங்கும் முன்னோடிகள் என்று குறிப்பிட்டார். அவர்களின் சாதனைகள் பலருக்கு ஊக்கமளிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தெலுங்கானா ஆளுநர் திரு ஜிஷ்ணு தேவ் வர்மா, முன்னாள் குடியரசு துணைத்தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு, தெலுங்கானா முதலமைச்சர் திரு ஏ ரேவந்த் ரெட்டி, ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு என் சந்திரபாபு நாயுடு, மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி, மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு கிஞ்சரபு ராம்மோகன் நாயுடு, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி திரு என் வி ரமணா, ராமோஜி குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு சி கிரோன், முக்கிய திரைப்பட ஆளுமைகள் மற்றும் பல பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Matribhumi Samachar Tamil

