குடியரசுத் தலைவர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள பரம் வீர் விருது பெற்றவர்களின் காட்சிக்கூடத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள படங்கள், தேசத்தின் துணிச்சலான வீரர்களுக்குச் செலுத்தப்படும் மனமார்ந்த அஞ்சலி என்றும், அவர்களின் தியாகங்களுக்கு நாடு செலுத்தும் நன்றியின் அடையாளம் என்றும் அவர் கூறினார். தாய்நாட்டை தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்து பாதுகாத்து, இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்துள்ள அந்த வீரத் தளபதிகளை கௌரவிப்பதாக இந்த படங்கள் உள்ளன என்று அவர் கூறினார்.
பரம் வீர் சக்ரா விருது பெற்ற இரண்டு பேர் மற்றும் பிற விருதுகளை பெற்றுள்ள வீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் முன்னிலையில், பரம் வீர் சக்ரா விருது பெற்றவர்களின் இந்த காட்சிக்கூடத்தை நாட்டிற்கு அர்ப்பணிப்பது மேலும் சிறப்பாக்கும் வகையில் அமைந்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
நீண்ட காலமாக, குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள காட்சிக்கூடங்களில் ஆங்கிலேயர் காலத்தில் பணியாற்றிய வீரர்களின் உருவப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அவை தற்போது தேசத்தின் பரம் வீர் சக்ரா விருது பெற்றவர்களின் உருவப்படங்களால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் கூறினார். குடியரசுத் தலைவர் மாளிகையில் பரம் வீர் சக்ரா விருது பெற்றவர்களின் காட்சிக்கூடம் அமைக்கப்பட்டுள்ளதன் மூலம், காலனித்துவ மனப்பான்மையிலிருந்து வெளிவந்து, புதுப்பிக்கப்பட்ட உணர்வுடன் தேசத்தை இணைப்பதற்கான இந்தியாவின் முயற்சிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது என்று அவர் கூறினார். சில ஆண்டுகளுக்கு முன்பு, அந்தமான் – நிக்கோபார் தீவுகளில் உள்ள பல தீவுகளுக்கு பரம் வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டதையும் அப்போது அவர் நினைவு கூர்ந்தார்.
இளம் தலைமுறையினருக்கு இந்தக் காட்சிக்கூடத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், இந்த உருவப்படங்களும் காட்சிக்கூடமும் இந்தியாவின் வீரப் பாரம்பரியத்துடன் இணைந்து செயல்பட இளைஞர்களுக்கு ஒரு சக்திவாய்ந்த தலமாக இருக்கும் என்று கூறினார். தேசிய இலக்குகளை அடைவதில் மன வலிமை மற்றும் உறுதியான நிலைப்பாட்டின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்க இந்தக் காட்சிக்கூடம் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கும் என்றும், வளர்ச்சியடைந்த இந்தியாவின் உணர்வை உள்ளடக்கிய அர்ப்பணிப்பு மிக்க புனித யாத்திரைத் தலமாக இது உருவெடுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
Matribhumi Samachar Tamil

