உலகத்தரம் வாய்ந்த சாலை மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பை உருவாக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்றும், உலகிலேயே சாலை கட்டமைப்பில் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது என்றும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை இணையமைச்சர் திரு ஹர்ஷ் மல்ஹோத்ரா கூறியுள்ளார்.
தில்லியில் இன்று நடந்த சாலை மற்றும் நெடுஞ்சாலைகள் உச்சி மாநாட்டில் அவர் உரையாற்றினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், திரு நிதின் கட்கரியின் வழிகாட்டுதலில், மக்களை இணைக்கும், பொருளாதார வளர்ச்சியை இயக்கும் மற்றும் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்யும் உலகத்தரம் வாய்ந்த சாலை மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பை உருவாக்க மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.
கடந்த 11 ஆண்டுகளில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்த, அமைச்சகம் அயராது உழைத்துள்ளதாக திரு மல்ஹோத்ரா கூறினார்.
இந்த நவீன நெடுஞ்சாலைகள் வெறும் சாலைகள் மட்டுமல்ல என்று கூறிய அவர், அவை மக்கள், தொழில்கள் மற்றும் வாய்ப்புகளை இணைக்கும் முன்னேற்றத்தின் உயிர்நாடிகள் என்று கூறினார்.
2014 ஆம் ஆண்டில் 91,000 கி.மீட்டராக இருந்த தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு இன்று 1.46 லட்சம் கி.மீட்டராக விரிவடைந்து, உலகின் இரண்டாவது பெரிய சாலை கட்டமைப்பாக மாறியுள்ளது என்றும் அமைச்சர் திரு மல்ஹோத்ரா கூறினார்.
2013–14 மற்றும் 2024–25 க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் சாலை உள்கட்டமைப்பிற்கான அரசின் செலவு 6.4 மடங்கு அதிகரித்துள்ளது என்றும், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு 2014 முதல் 2023–24 வரை 57% அதிகரித்துள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார், இது உள்கட்டமைப்பில் அரசின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
தலைநகரில் போக்குவரத்து நெரிசல் மற்றும் மாசுபாட்டைக் குறைப்பதையும், நகரத்தில் இணைப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டத்தை திரு மல்ஹோத்ரா சுட்டிக்காட்டினார்.
2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்கு இலக்கை அடைவதற்கு அதிக நெடுஞ்சாலைகளை நிர்மாணிப்பது மிக முக்கியமானது என்று திரு மல்ஹோத்ரா கூறினார். நெடுஞ்சாலை மேம்பாட்டில் முதலீடு செய்யப்படும் ஒவ்வொரு ரூபாயும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று மடங்கு வருமானத்தை அளிக்கிறது, விரிவான வேலைவாய்ப்புகளை அளிக்கிறது. மேலும் வருவாய் ஈட்டுவதற்கான பல வழிகளைத் திறக்கிறது. அரசு சாலைகளை அமைப்பதன் மூலம், ஒரு வளமான, அமைதியான மற்றும் மீள்தன்மை கொண்ட பாரதத்திற்கு அடித்தளம் அமைத்து வருகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.
Matribhumi Samachar Tamil

