Monday, December 08 2025 | 11:54:17 AM
Breaking News

வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை அடைய இந்திய இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டுதல் தேவை: மக்களவைத் தலைவர்

Connect us on:

2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய பயணத்தில் இந்திய இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டுதல், தொழில்நுட்ப ஆதரவு மற்றும் கொள்கை உருவாக்கம் தேவை என்று மக்களவைத் தலைவர் திரு  ஓம் பிர்லா இன்று வலியுறுத்தினார். இதற்கான சமூகம் மற்றும் தேசத்தின் முழுமையான வளர்ச்சியில் சமூக அமைப்புகளின் பங்கு மிகவும் முக்கியமானது என்று அவர் கூறினார்.

குருகிராமில் இன்று ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பு  ஏற்பாடு செய்திருந்த “ஜிடெம் இளைஞர் மாநாடு 2025”-ல் உரையாற்றும் போது திரு பிர்லா இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்

“அந்தியோதயா” (கடைசி நபரையும் முன்னேறச் செய்தல்) என்ற உணர்வை வெளிப்படுத்துவது,  ஒரு பகிரப்பட்ட பொறுப்பு என்று திரு பிர்லா குறிப்பிட்டார். இந்த விஷயத்தில் ஜெயின் சமூகத்தின் முயற்சிகள் ஊக்கமளிக்கும் முன்மாதிரியானவை என்று அவர் மேலும் கூறினார். இந்தியாவின் இளைஞர்கள் எண்ணிக்கையில் மட்டுமல்ல, உறுதியிலும் பரந்த அளவில் உள்ளனர் என்பதை திரு பிர்லா அடிக்கோடிட்டுக் காட்டினார். மாற்றத்திற்கான ஆர்வம், எதிர்காலத்தை வடிவமைக்கும் திறன் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் ஆர்வம் அவர்களிடம் உள்ளது. இளைஞர்கள் வேலை தேடுபவர்கள் மட்டுமல்ல, வேலை உருவாக்குபவர்களாகவும் மாறி வருகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார். ஸ்டார்ட்-அப் இந்தியா, திறன் இந்தியா, மேக் இன் இந்தியா மற்றும் பசுமை எரிசக்தி மிஷன் போன்ற பிரச்சாரங்கள் தங்கள் ஆற்றலை நேர்மறையாக இயக்கியுள்ளன என்று அவர் கூறினார்.

ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பு  என்பது வெறும் வர்த்தகம் மற்றும் வணிகத்திற்கான ஒரு சமூக அமைப்பு மட்டுமல்ல என்பதைக் குறிப்பிட்ட திரு பிர்லா, வர்த்தகம், புதுமை, சமணக் கொள்கைகள், சமண சிந்தனைகள், சமண துறவிகளின் போதனைகள் மற்றும் பகவான் மகாவீரரின் தத்துவங்கள் ஒன்றிணையும் ஒரு நிறுவனம் என்று கருத்து தெரிவித்தார். அது புதிய தொழில்நுட்பம், கருத்துக்கள் மற்றும் புதுமைகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு தளம் என்றும் அவர் கூறினார். பொருளாதாரம், கல்வி மற்றும் சேவை சார்ந்த செயல்பாடுகள் மூலம், இந்த அமைப்பு ஜெயின் சமூகத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், இந்தியாவின் வளர்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை  வழங்குகிறது என்று அவர் தெரிவித்தார்.

வர்த்தகம், தொழில், சமூகத் துறைகள், நகர்ப்புற அரசியல், தொழில்நுட்பம் மற்றும் அறிவியல், சமூக சேவை அல்லது அரசு சேவை என எந்த துறையாக இருந்தாலும், ஜெயின் சமூகம் அவர்களின் நெறிமுறைகள் மற்றும் ஆன்மீக நம்பிக்கை காரணமாக நாட்டில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது என்று திரு பிர்லா குறிப்பிட்டார். இந்தியாவில் மட்டுமல்ல, பல நாடுகளிலும், ஜெயின் சமூகம் முன்னேற்றம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சிக்கு பங்களித்துள்ளது என்றும் அவர் கூறினார். தார்மீக சிந்தனைகள், சமூக ஒத்துழைப்பு, அர்ப்பணிப்பு, சேவை, துறவு, உலகளாவிய அமைதி மற்றும் நல்லெண்ணம் ஆகியவை ஜெயின் சமூகத்தின் முக்கிய கொள்கைகள் என்பதை திரு பிர்லா சுட்டிக் காட்டினார்.

இந்திய ஜனநாயகத்தின் வலிமையைப் பற்றிப் பேசிய திரு பிர்லா, இந்திய ஜனநாயகம் என்பது சுதந்திரத்திற்குப் பிந்தைய ஒரு நிகழ்வு மட்டுமல்ல, அது நாட்டின் பணி நெறிமுறைகள், கலாச்சாரம், நடத்தை, ஆன்மீக நம்பிக்கைகள் மற்றும் சமூகத்தின் கூட்டு நலனில் ஆழமாகப் பதிந்துள்ளது என்றார். சுதந்திரத்தின் போது, இந்தியா போன்ற ஒரு பெரிய மற்றும் பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் ஜனநாயகம் வெற்றிபெறாது என்று பல நாடுகள் நம்பியதாகவும், ஆனால் இந்தியா அதைத் தவறு என நிரூபித்ததாகவும் திரு பிர்லா நினைவு கூர்ந்தார்.

About Matribhumi Samachar

Check Also

கொடிநாள் நிதிக்கு தாராளமாக பங்களிப்பு வழங்க வேண்டும் – பொது மக்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வேண்டுகோள்

ஆயுதப்படைகளின் தியாகங்களையும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் போற்றும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 07 அன்று நாடு முழுவதும்  ஆயுதப்படைகள் கொடி நாள் கடைபிடிக்கப்படுகிறது. நாட்டைப் பாதுகாக்கும் துணிச்சலான வீரர்களுக்கு இந்த நாளில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டுத் தெரிவித்துள்ளார். மேலும், ஆயுதப்படைகளின் கொடிநாள் நிதிக்கு தாராளமாக பங்களிப்பு வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “ஆயுதப்படை கொடி நாளன்று, நமது ஆயுதப்படைகளின் வீரத்துக்கும் தியாகங்களுக்கும் நான் தலை வணங்குகிறேன். அவர்களின் துணிச்சல் நமது நாட்டைப் பாதுகாக்கிறது. அவர்களின் தன்னலமற்ற சேவை நாம் ஒருபோதும் திருப்பிச் செலுத்த முடியாத கடனாகும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. ஆயுதப்படை கொடி நாள் நிதிக்கு தாராளமாக பங்களிக்குமாறு அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஆதரவு அவர்களின் அர்ப்பணிப்பை மதிப்பதாக அமையும் என்பதுடன் நம்மைப் பாதுகாப்பவர்களை பலப்படுத்தும்.” என்று திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் ஆயுதப் படைகளின் முக்கிய பங்கை சுட்டிக்காட்டியுள்ளார். மனிதாபிமான நடவடிக்கைகளிலும் அவர்களின் அசாதாரண அர்ப்பணிப்பை திரு சஞ்சய் சேத் எடுத்துரைத்துள்ளார். முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சௌகான், பாதுகாப்புத் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங், பாதுகாப்பு ஆராய்ச்சி – மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ தலைவர் டாக்டர் சமீர் வி காமத், முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை செயலாளர் திருமதி சுக்ரிதி லிக்கி ஆகியோரும் ஆயுதப்படை வீரர்களின் அர்ப்பணிப்புக்கு மரியாதை செலுத்தியுள்ளனர். கொடிநாள் நிதிக்கான பங்களிப்புகளுக்கு, வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 80ஜி (5)(vi)-ன் கீழ் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன. பங்களிப்புகளை பின்வரும் வங்கிக் கணக்குகளில் காசோலை/வரைவோலை/நெஃப்ட்/ஆர்டிஜிஎஸ் மூலம் செலுத்தலாம்: 1) பஞ்சாப் நேஷனல் வங்கி, சேவா பவன், ஆர்.கே. புரம் புது தில்லி-110066. கணக்கு எண் – 3083000100179875 ஐஎஃப்எஸ்சி குறியீட்டு எண் – PUNB0308300 2) பாரத ஸ்டேட் வங்கி ஆர்.கே. புரம் புது தில்லி-110066. கணக்கு எண் – 34420400623 …