Friday, January 23 2026 | 08:48:50 AM
Breaking News

குடியரசுத் தலைவர் ஹைதராபாத்தில் நடைபெற்ற பாரதத்தின் காலத்தால் அழியாத ஞானம் என்ற மாநாட்டில் உரையாற்றினார்

Connect us on:

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, பிரம்ம குமாரிகள் சாந்தி சரோவர் அமைப்பின் 21-வது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில், இன்று (டிசம்பர் 20, 2025) ஹைதராபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘பாரதத்தின் காலத்தால் அழியாத ஞானம்: அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கான பாதைகள்’ என்ற மாநாட்டில் உரையாற்றினார்.

அதில் பேசிய குடியரசுத் தலைவர், உலக சமூகம் எண்ணற்ற மாற்றங்களுக்கு உள்ளாகி வருகிறது என்றார். இந்த மாற்றங்களுடன், மனநலப் பிரச்சினைகள், சமூக மோதல்கள், சுற்றுச்சூழல் சமநிலையின்மை மற்றும் மனித விழுமியங்களின் சிதைவு போன்ற பல கடுமையான சவால்களையும் நாம் எதிர்கொள்கிறோம். இந்தச் சூழ்நிலையில், மாநாட்டின் கருப்பொருள் மிகவும் பொருத்தமானதாக உள்ளது. பொருள்சார் வளர்ச்சி மட்டுமே மகிழ்ச்சியையும் அமைதியையும் தராது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். அக நிலைத்தன்மை, உணர்வுகள் மற்றும் விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறை ஆகியவை அவசியமானவை என்றார் அவர்.

இந்தியாவின் பழங்கால முனிவர் பாரம்பரியம் நமக்கு உண்மை, அகிம்சை மற்றும் அமைதியான சகவாழ்வு என்ற செய்தியை வழங்கியுள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறினார். நமது ஆன்மீகப் பாரம்பரியம் உலகின் மன, தார்மீக மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குகிறது. நவீனத்துவமும் ஆன்மீகமும் சங்கமிப்பதே நமது நாகரிகத்தின் மிகப்பெரிய பலம். ‘வசுதைவ குடும்பகம்’ என்ற கருத்து —முழு உலகத்தையும் ஒரே குடும்பமாகக் கருதும் எண்ணம்— இன்றைய உலக அமைதிக்கு மிகவும் அவசியமானதாகும் என அவர் கூறினார்.

சமூக ஒற்றுமைக்கும் தேசிய முன்னேற்றத்திற்கும் ஆன்மீகம் ஒரு வலுவான அடித்தளமாகச் செயல்படுகிறது என்று குடியரசுத் தலைவர் கூறினார். ஒரு தனிநபர் மன உறுதி, தார்மீக விழுமியங்கள் மற்றும் சுயக்கட்டுப்பாட்டை வளர்த்துக் கொள்ளும்போது, அவரது நடத்தை சமூகத்தில் ஒழுக்கம், சகிப்புத்தன்மை மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிக்கிறது. ஆன்மீக உணர்வால் ஈர்க்கப்பட்ட மக்கள் தங்கள் கடமைகளை உணர்ந்து, சமூகத்தில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவர பாடுபடுகிறார்கள். அத்தகைய தனிநபர்கள் தேசத்தைக் கட்டியெழுப்புவதிலும் தீவிரமாகப் பங்களிக்கின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

பல தசாப்தங்களாக, பிரம்ம குமாரிகள் அமைப்பு உலகளாவிய இந்திய விழுமியங்களை பல்வேறு நாடுகளுக்குப் பரப்பி வருகிறது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அமைப்பு மக்களிடையே அமைதியையும் நேர்மறை எண்ணங்களையும் வளர்ப்பதன் மூலம் சமூகத்தின் தார்மீக மற்றும் உணர்வுபூர்வ பிணைப்பை வலுப்படுத்தி வருகிறது. இதன் மூலம், இது தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து வருகிறது என்று  குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.

About Matribhumi Samachar

Check Also

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத்தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக குடியரசு துணைத்தலைவர் திரு …