பராக்கிரம தினம் 2025-யையொட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த இடமான வரலாற்று நகரம் கட்டாக்கில் உள்ள பாராபதி கோட்டையில் 2025 ஜனவரி 23 முதல் 25 வரை பிரமாண்டமான கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. இந்தப் பன்முக கொண்டாட்டம் நேதாஜியின் 128-வது பிறந்த நாளையொட்டி அவரது பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில் அமையும். இந்த மூன்று நாள் நிகழ்வை ஒடிசா முதலமைச்சர் திரு மோகன் சரண் மாஜி 23.01.2025 அன்று தொடங்கி வைக்கிறார்.
நேதாஜியின் பிறந்த தினத்தை ‘பராக்கிரம தினம்’ என்று நினைவுகூர அரசு 2022 இல் எடுத்த முடிவைத் தொடர்ந்து, அந்த ஆண்டு கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா மெமோரியலில் முதலாவது பராக்கிரம தின நிகழ்ச்சி நடைபெற்றது. புதுதில்லியில் இந்தியா கேட்டில் நேதாஜியின் ஹாலோகிராம் சிலை திறக்கப்பட்டது. மேலும் 2023-ம் ஆண்டில், அந்தமான், நிக்கோபார் தீவுகளில் பெயரிடப்படாத 21 தீவுகளுக்கு 21 பரம் வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டன. 2024-ம் ஆண்டில், தில்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையில் இந்த நிகழ்வைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.
இந்த ஆண்டு பராக்கிரம தினக் கொண்டாட்டம், நேதாஜியின் பிறந்த இடமும், அவரது ஆரம்பகால உணர்வுகளை வடிவமைத்த நகரமுமான கட்டாக்கில் கலாச்சார அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், ஒடிசா முதலமைச்சர் மற்றும் இதர பிரமுகர்கள் நேதாஜிக்கு மரியாதை செலுத்தி, நேதாஜி பிறந்த வீட்டில் தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார்கள். நேதாஜி பிறந்த வீடானது அர்ப்பணிக்கப்பட்ட அருங்காட்சியகமாக மாற்றப்படவுள்ளது. அதைத் தொடர்ந்து, பாராபதி கோட்டையில் பராக்கிரம தினக் கொண்டாட்டம் பிரதமரின் காணொளி செய்தியுடன் தொடங்கும். இதில் நேதாஜியின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட புத்தகம், புகைப்படம் மற்றும் காப்பக கண்காட்சி, அரிய புகைப்படங்கள், கடிதங்கள், ஆவணங்கள் மற்றும் அவரது குறிப்பிடத்தக்க பயணத்தை விவரிக்கும் காட்சி ஆகியவை இடம்பெறும். விழாவையொட்டி சிற்பப் பயிலரங்கம், ஓவியப் போட்டி மற்றும் பயிலரங்கம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நேதாஜியின் பாரம்பரியத்தை கௌரவிக்கும் மற்றும் ஒடிசாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் கலாச்சார நிகழ்ச்சிகளும் இடம்பெறும். மேலும், இந்த நிகழ்ச்சியில் நேதாஜியின் வாழ்க்கை குறித்த திரைப்படங்களும் திரையிடப்படும்.
Matribhumi Samachar Tamil

