Thursday, December 11 2025 | 09:25:57 AM
Breaking News

தேசிய சுகாதார இயக்கத்தின் (2021-24) சாதனைகள்: இந்தியாவின் பொது சுகாதார சேவைகளை மேம்படுத்துவதில் ஒரு மைல்கல்

Connect us on:

மனித வளங்களை விரிவுபடுத்துதல், முக்கியத்துவம் வாய்ந்த சுகாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், சுகாதார அவசரநிலைகளுக்கு ஒருங்கிணைந்த தீர்வை கண்டறிதல் போன்ற  தொடர்  முயற்சிகள் வாயிலாக நாட்டின் பொது சுகாதார சேவைகளை மேம்படுத்துவதில் தேசிய சுகாதார இயக்கம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், தாய்-சேய் நலம், நோய் ஒழிப்பு, சுகாதார உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தேசிய சுகாதார இயக்கம் கணிசமான அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த இயக்கத்தின் முயற்சிகள் நாட்டின்  சுகாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு குறிப்பாக கொவிட்-19 பெருந்தொற்று பரவல் காலத்தில் அனைவரும் அணுகக்கூடிய வகையில் ஒருங்கிணைக்கப்பட்டு தரமான சுகாதார சேவைகளை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகித்துள்ளன.

சுகாதாரத் துறையில் மனித வள  பயன்பாடு கணிசமான அளவில் அதிகரித்திருப்பது தேசிய சுகாதார இயக்கத்தின் முக்கிய சாதனையாகும்.

தற்போதுள்ள சுகாதார வசதிகள், பணியாளர்களின் கட்டமைப்பை  பயன்படுத்தி 2021 ஜனவரி  முதல் 2024 மார்ச் வரை 220 கோடிக்கும் அதிகமான கொவிட் -19 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் முக்கிய சுகாதார குறியீடுகளில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. பேறுகால இறப்பு விகிதம், பச்சிளங்குழந்தை இறப்பு விகிதம் ஆகியவை கணிசமான அளவில் குறைக்கப்பட்டுள்ளதற்கு மேம்பட்ட சுகாதார சேவைகள் முக்கிய காரணியாக திகழ்கின்றன.

தேசிய நலவாழ்வு குழுமம் பல்வேறு நோய்களை அகற்றுவதிலும், கட்டுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக, தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ், 2015-ம் ஆண்டில் 1,00,000 மக்கள்தொகைக்கு 237 ஆக இருந்த பாதிப்பு 2023-ம் ஆண்டில் 195 ஆக குறைந்துள்ளது.

தட்டம்மை-ரூபெல்லா ஒழிப்பு பிரச்சாரம், தீவிர  இந்திரதனுஷ் தடுப்பூசி இயக்கத்தின் கீழ், 34.77 கோடிக்கும் அதிகமான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

சிறப்பு சுகாதார முயற்சிகளைப் பொறுத்தவரை, 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில்  தொடங்கப்பட்ட பிரதமரின் காசநோய் ஒழிப்புத் திட்டம் 9.40 லட்சத்துக்கும் மேற்பட்ட காச நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவியது. பிரதமரின் தேசிய டயாலிசிஸ் திட்டமும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

டிஜிட்டல் சுகாதார நடவடிக்கைகளிலும் மத்திய அரசு முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. 2023-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கப்பட்ட U-WIN இணையதளம் நாடு முழுவதிலும் உள்ள கர்ப்பிணிப் பெண்கள், பச்சிளங்குழந்தைகள், சிறார்களுக்கு சரியான நேரத்தில் தடுப்பூசிகள் வழங்கப்படுவதை உறுதி செய்கிறது. 2023-24-ம் நிதியாண்டின் இறுதியில், இந்த இணையதளம் 36 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 65 மாவட்டங்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டு தடுப்பூசி கண்காணிப்பு, நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை உறுதி செய்தது.

தேசிய சுகாதார இயக்கத்தின் முயற்சிகள் காரணமாக 24 மணி நேரமும்  இயங்கக்கூடிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் அவசர சிகிச்சைக்கான சேவைகள் மேம்படுத்தப்பட்டன.

கூடுதலாக, நடமாடும் மருத்துவ சேவைகளின் மூலம் தொலைதூர மற்றும் பின்தங்கிய பகுதிகளில் சுகாதார சேவையை வழங்குவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

புகையிலை பயன்பாடு, பாம்புக்கடி விஷம் போன்ற பொது சுகாதாரத்தில் உள்ள சிக்கல்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. தொடர்ச்சியான பொது விழிப்புணர்வு பிரச்சாரங்கள்,  புகையிலை கட்டுப்பாட்டு சட்டங்களை அமல்படுத்துவதன் மூலம், பத்தாண்டுகளில் புகையிலை பயன்பாடு 17.3% குறைந்துள்ளது.

பின்னணி:
தேசிய ஊரக நலவாழ்வு குழுமம் 2005-ம் ஆண்டு கிராமப்புற மக்களுக்கு, குறிப்பாக பாதிப்படையக்கூடிய பிரிவினருக்கு, மாவட்ட மருத்துவமனைகள் வாயிலாக குறைந்த செலவில் தரமான சுகாதார சேவையை வழங்குவதற்காக பொது சுகாதார கட்டமைப்புகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.
தேசிய சுகாதார இயக்கத்தை 2017-ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் 2020 மார்ச் 31 வரை தொடர்வதற்கு 2018 மார்ச் 21 அன்று நடைபெற்ற மத்திய  அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

About Matribhumi Samachar

Check Also

தேசிய பாடலான வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டையொட்டி மக்களவையில் இன்று நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

தேசிய பாடலான வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டையெட்டி மக்களவையில் இன்று நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். …