
தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு ஆணையர் திரு லால்வேனா மற்றும் அதிகாரிகளுடன் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய (எஃப்எஸ்எஸ்ஏஐ) தலைமைச் செயல் அதிகாரி திரு ஜி. கமலா வர்தன ராவ் இன்று ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் உணவு நிறுவனங்களில் ஆய்வுகளை அதிகரிக்க வேண்டும் என்றும், உணவு பரிசோதனை ஆய்வகங்களை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அப்போது அவர் வலியுறுத்தினார்.
ஆரோக்கியமான, சுகாதாரமான உணவக மையங்களை (ஃபுட் ஸ்ட்ரீட்) மேம்படுத்தும் பணிகள் குறித்தும் திரு ராவ் தமிழ்நாடு அதிகாரிகளுடன் விவாதித்தார். மேலும் இந்த மையங்களை பொதுமக்கள் விரைவில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக பணிகளை விரைவுபடுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
சென்னையில் உள்ள எஃப்எஸ்எஸ்ஏஐ தென் மண்டல அலுவலகத்தை பார்வையிட்ட இந்திய உணவு தர நிர்ணய ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரி, சென்னை மண்டல அலுவலகம் மற்றும் தேசிய உணவு ஆய்வகத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்து மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் நிராகரிக்கப்பட்ட உணவுப் பொருட்களின் இறக்குமதியை தடுப்பது தொடர்பான செயல்முறைகள் குறித்தும் அவர் விவாதித்தார். நுகர்வோருக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உணவு இறக்குமதி அனுமதி செயல்முறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு ராவ், உணவு இறக்குமதி அனுமதி தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

Matribhumi Samachar Tamil

