நாட்டில் பன்னோக்கு தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் நீண்டகாலம் நிலைத்து செயல்படுவதை உறுதி செய்யும் வகையில் கூட்டுறவு அமைச்சகம் பல்வேறு முக்கியமான முன்னெடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. சிறிய மற்றும் விளிம்பு நிலையில் உள்ள விவசாயிகள் குறைந்த வட்டியில் கடன் பெறுவதிலும் தரமான வேளாண் உள்ளீடுகளைப் பெறுவதிலும் உள்ள சவால்களை தீர்ப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அத்தகைய நடவடிக்கைகளில் கீழ்வருவனவும் உள்ளடங்கும்:
1.நாட்டில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தவும் அதன் பலன்கள் கடைக்கோடி கிராமங்கள் வரை சென்று சேரவும் இரண்டு லட்சம் புதிய பன்னோக்கு தொடக்க வேளாண் கடன் சங்கங்களையும் பால்வளம் மற்றும் மீன்வள கூட்டுறவு சங்கங்களையும் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.
2.மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தின்கீழ் 2,925.39 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் பன்னோக்கு தொடக்க வேளாண் கடன் சங்கங்களை கணினி மயமாக்குதல்
3.பிரதமரின் வேளாண் வளர்ச்சி மையங்களாக பன்னோக்கு தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் செயல்படும்
4.300 இ-சேவைகளை வழங்கக்கூடிய பொது சேவை மையங்களாக பன்னோக்கு தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் செயல்படும்
5.பன்னோக்கு தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் வருங்காலத்தில் பெட்ரோல்/டீசல் விற்பனையகங்களாகவும் சமையல் எரிவாயு விநியோக மையங்களாகவும் செயல்படும்
6.வீட்டு வாசலில் வங்கிச் சேவைகள் வழங்கும் வகையில் ரூபே, கிசான் கடன் அட்டை போன்றவை வழங்கப்படும்
7.கூட்டுறவுத் துறையில் உழவர் உற்பத்தியாளர் கழகங்களை பன்னோக்கு தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் உருவாக்கும். இதனால் விவசாயிகள் சந்தை வாய்ப்புகளைப் பெறவும் தங்கள் விளைபொருட்களுக்கு உரிய விலை பெறவும் முடியும்.
இந்த முயற்சிகள் எல்லாம் சேர்ந்து பன்னோக்கு தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் துடிப்புமிக்க பல்வகை நோக்கங்கள் கொண்ட நிறுவனங்களாக செயல்பட்டு சிறிய மற்றும் விளிம்புநிலை விவசாயிகளின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும்.
பன்-மாநில கூட்டுறவு சங்க சட்டம் 2002ன் கீழ் நிறுவப்பட்டுள்ள சங்கமான பாரதிய பீஜ் சகாரி சமிதி லிமிட்டெட் பல்வேறு தேசிய அளவிலான வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இதனால் இந்த ஆராய்ச்சி நிறுவனங்களிடமிருந்து மரபணுரீதியாக உயர்திறன் கொண்ட நல்ல தரமான வளர்ப்பு விதைகளை பெறமுடியும்.
இதனை மக்களவையில் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா கேள்வி ஒன்றிற்கு எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் தெரிவித்துள்ளார்.
Matribhumi Samachar Tamil

