குஜராத் மாநிலம் சூரத்தில் ஸ்ரீ பாபுலால் ரூப்சந்த் ஷா மகாவீர் புற்றுநோய் மருத்துவமனை, ஸ்ரீ பூல்சந்த்பாய் ஜெய்கிஷண்டாஸ் வகாரியா நெஞ்சகநோய் மருத்துவமனை ஆகியவற்றை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா, சூரத் ஒரு முக்கியமான நகரம் என்றும், கடந்த சில ஆண்டுகளில் நகரத்தில் பல தொழிற்சாலைகள் உருவாகியுள்ளன என்றும் திரு அமித் ஷா கூறினார். குஜராத்தில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த மேற்கு இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகளின் மையமாகவும் சூரத் மாறியுள்ளது என்று அவர் தெரிவித்தார். பொருளாதார நடவடிக்கைகளின் மையமாக மாறியுள்ள ஒரு நகரத்தில், அதன் மக்கள் தொகை அதிகரிப்பது இயற்கையானது என்று அவர் குறிப்பிட்டார். இந்நிலையில், சூரத்தில் புதிய மருத்துவமனைகள், குறிப்பாக அரசு மருத்துவமனைகள் கட்டப்பட்டதால் மருத்துவ வசதிகள் அதிகரித்துள்ளன என்று அவர் கூறினார்.
சுமார் 250 கோடி ரூபாய் செலவில் 110 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனை ஒரு பெரிய புற்றுநோய் சிகிச்சை மையமாக உள்ளது என்றும், குறைந்த வருவாய் பிரிவினருக்கு இது சேவை செய்யும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஸ்ரீ பூல்சந்த்பாய் ஜெய்கிஷண்டாஸ் வகாரியா நெஞ்சகநோய் மருத்துவமனையில் பொது மக்களுக்காக மருத்துவ வசதிகளுடன் கூடிய 36 அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டில் சுகாதார கட்டமைப்புகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார். 2013-14-ம் ஆண்டில் சுகாதாரத்துறைக்கான நிதி ஒதுக்கீடு 37 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது என்றும், தற்போது அதற்கான ஒதுக்கீடு 98 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் திரு அமித் ஷா கூறினார்.
Matribhumi Samachar Tamil

