தொழில்முனைவு, கலாச்சாரம், சேவை உள்ளிட்டவற்றில் சிந்தி சமூகத்தினரின் அர்ப்பணிப்பு அவர்களை நாட்டின் சமூக, பொருளாதார வலிமையின் தூணாக மாற்றியுள்ளது என்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா கூறியுள்ளார்.
புதுதில்லி விஞ்ஞான் பவனில் விஸ்வ சிந்தி இந்து சங்கங்களின் அறக்கட்டளை இன்று (23.11.2025) ஏற்பாடு செய்திருந்த ” வலுவான சமூகம் – வளமான இந்தியா” (சஷக்த் சமாஜ் – சம்ரித் பாரத்) என்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றுப் பேசினார்.
சிந்தி சமூகத்தினரின் சேவைக்கான உறுதியான அர்ப்பணிப்பையும், ஆழமான கலாச்சார பாரம்பரியத்தையும் அவர் எடுத்துரைத்தார். இந்த குணங்கள் இந்தியாவின் சமூக, பொருளாதார, கலாச்சார முன்னேற்றத்திற்கு முக்கிய பங்களிப்பதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்த சமூகத்தின் வலிமையையும், மீட்சித் தன்மையையும் பாராட்டிய திரு ஓம் பிர்லா, வலுவான இந்தியாவின் அடித்தளத்தை உருவாக்கும் கொள்கைகளை இந்த சமூகம் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
வணிகம், தொழில், வங்கி, சேவைகள், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் இந்த சமூகம் தொடர்ந்து சிறந்து விளங்கி வருவதாகவும், இதன் மூலம் பல லட்சக் கணக்கானவர்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கி வருவதாகவும் அவர் கூறினார். இந்த சமூகத்தினரின் வெற்றி பொருளாதாரத்தில் மட்டுமல்லாமல், நம்பிக்கை, ஒத்துழைப்பு ஆகியவற்றின் ஆழமான மதிப்புகளிலும் வேரூன்றியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இந்த மதிப்புகள் நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரிதும் பங்களிக்கின்றன என அவர் கூறினார்.
தேசப் பிரிவினையின் போது சிந்தி சமூகத்தினர் சந்தித்த சோதனைகள், இந்த சமூகத்தை மேலும் வலுப்படுத்தியதாக மக்களவைத் தலைவர் தெரிவித்தார். பொருள் இழப்பு உள்ளிட்ட பல இழப்புகள் இருந்தபோதிலும், சிந்தி சமூகத்தினர் தங்கள் மதம், மரபுகள், பழக்கவழக்கங்கள், கலாச்சார அடையாளத்தை கடுமையாக பின்பற்றுவதாக அவர் கூறினார். அசாதாரண உறுதியுடன் அவர்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பியதாகவும் துன்பங்களை வாய்ப்பாக மாற்றியதாகவும் அவர் தெரிவித்தார். இந்த சமூகத்தினரின் மீட்சித் தன்மைக்கும் கலாச்சார பெருமைக்கும் ஒரு ஆழமான எடுத்துக்காட்டாக உள்ளது என்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Matribhumi Samachar Tamil

