நாட்டின் புலனாய்வு துறைகள் மேற்கொண்டு வரும் கண்காணிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) “ஆபரேஷன் டீப் மேனிஃபெஸ்ட்” என்ற பெயரில் ஒரு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் மூன்றாம் நாடுகள் வழியாக, அதாவது துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் வழியாக அனுப்பப்படும் பாகிஸ்தானைச் சேர்ந்த பொருட்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்வதை இலக்காகக் கொண்டு இந்த கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் மூலம் இதுவரை ₹9 கோடி மதிப்பிலான 1,115 மெட்ரிக் டன் பொருட்களை ஏற்றிச் சென்ற 39 கொள்கலன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தானைச் சேர்ந்த பொருட்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்தியாவில் இறக்குமதி செய்யவோ அல்லது கொண்டு செல்லவோ மத்திய அரசால் விதிக்கப்பட்டுள்ள தடைகளை மீறி செயல்படுபவர் மீது மத்திய வருவாய் துறை இயக்குனரகம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்தப் பொருட்களை இறக்குமதி செய்த நிறுவனத்தின் கூட்டாளிகளில் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து வரும் அல்லது ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்யும் நடவடிக்கைகளுக்கு கடந்த மே 2-ம் தேதி முதல் மத்திய அரசு தடை விதித்துள்ளது. முன்னதாக, அத்தகைய பொருட்களுக்கு 200% இறக்குமதிவரி விதிக்கப்பட்டு வந்தது. இது போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதிலும், சில இறக்குமதியாளர்கள், பொருட்களின் விவரங்களைத் தவறாக தெரிவித்து, தொடர்புடைய கப்பல் ஆவணங்களை கையாண்டு மத்திய அரசின் கொள்கைகளுக்குப் புறம்பாக இறக்குமதி செய்ய முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பான இரண்டு தனித்தனி வழக்குகளில், இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் அனைத்தும் நவா ஷேவா துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தப் பொருட்கள், பாகிஸ்தானிலிருந்து வந்தவை என்றும், அவற்றின் விவரங்கள் மறைக்கப்பட்டு, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வழியாக இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது தொடர்பான விசாரணைகளில், இந்தப் பொருட்கள் உண்மையில் பாகிஸ்தானிலிருந்து வந்தவை என்றும், துபாய் வழியாக இந்தியாவிற்கு இறக்குமதி செய்வதற்காக மட்டுமே அனுப்பப்பட்டன என்றும் தெரியவந்துள்ளது.
Matribhumi Samachar Tamil

