Sunday, December 07 2025 | 08:25:02 PM
Breaking News

ஐதராபாதில் உள்ள சஃப்ரான் விமான என்ஜின் சேவைகள் இந்தியா நிறுவனத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி, காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்

Connect us on:

ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஜிஎம்ஆர் விண்வெளி மற்றும் தொழில்துறை பூங்கா – சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் சஃப்ரான் விமான என்ஜின் சேவைகள் இந்தியா நிறுவனத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், “இன்று முதல் இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை புதிய பாதையில் பயணிக்கிறது. சஃப்ரானின் புதிய நிறுவனம் இந்தியாவை உலகளாவிய பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் புதுப்பித்தல் (எம்ஆர்ஓ) மையமாக நிலைநிறுத்த உதவும்” என்றார். இந்த எம்ஆர்ஓ மையம் உயர் தொழில்நுட்ப விண்வெளித் துறையில் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும் என்று பிரதமர் கூறினார். சஃப்ரான் வாரியம் மற்றும் நிர்வாகத்தை நவம்பர் 24 அன்று சந்தித்ததை நினைவு கூர்ந்த அவர், முன்னதாக அவர்களுடனான ஒவ்வொரு கலந்துரையாடலிலும், இந்தியா குறித்த அவர்களின் நம்பிக்கையைத் தாம்  கண்டதாகவும் குறிப்பிட்டார். இந்தியாவில் சஃப்ரானின் முதலீடு இதே வேகத்தில் தொடரும் என்ற தமது எதிர்பார்ப்பை அவர் வெளிப்படுத்தினார். இந்தப் புதிய நிறுவனத்திற்காக சஃப்ரான் குழுவிற்குப் பிரதமர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முன்னேறி வருவதை எடுத்துரைத்த திரு மோடி, இந்தியா இன்று உலகின் வேகமாக வளர்ந்து வரும் உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சந்தைகளில் ஒன்றாக உள்ளது என்று குறிப்பிட்டார். இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சந்தை தற்போது உலக அளவில் மூன்றாவது பெரிய சந்தையாக மாறியுள்ளது என்பதை அவர் சுட்டிக் காட்டினார். இந்திய மக்களின் விருப்பங்கள் புதிய உயரங்களை எட்டியுள்ளன என்றும், இதன் விளைவாக நாட்டில் விமானப் பயணத்திற்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக விமான நிறுவனங்கள் தொடர்ந்து தங்கள் செயல்படும் விமான எண்ணிக்கையை அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்திய விமான நிறுவனங்கள் 1,500-க்கும் அதிகமான புதிய விமானங்களுக்கு  ஆர்டர்களை வழங்கியுள்ளன என்றும் அவர் கூறினார்.

இன்றைய இந்தியா பெரிய கனவுகளைக் காண்பது மட்டுமின்றி, துணிச்சலான முடிவுகளையும் எடுத்து பெரிய சாதனைகளைப் படைக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.  “நாங்கள் பெரிய கனவுகளைக் காண்கிறோம், பெரியதைச் செய்கிறோம், சிறந்ததை வழங்குகிறோம்” என்று அவர் கூறினார். வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கு இந்தியா வலுவான முக்கியத்துவம் அளித்து வருவதைப் பிரதமர் எடுத்துரைத்தார்.

விரைவான வளர்ச்சி, நிலையான அரசு, சீர்திருத்தம் சார்ந்த மனநிலை, பரந்த இளம் திறமையாளர்கள் குழு, பெரிய உள்நாட்டு சந்தை ஆகியவற்றை இன்றைய இந்தியா கொண்டுள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய திரு மோடி, மிக முக்கியமாக, இந்தியாவில் முதலீடு செய்பவர்களை, நாடு முதலீட்டாளர்களாக மட்டுமின்றி , வளர்ச்சியடைந்த இந்தியா பயணத்தில் இணை படைப்பாளர்களாகவும், பங்குதாரர்களாகவும் கருதுகிறது என்று குறிப்பிட்டார். இந்த நவீன எம்ஆர்ஓ வசதியை நிறுவியதற்காக அனைவருக்கும் அவர் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் தெலங்கானா முதலமைச்சர் திரு ரேவந்த் ரெட்டி, மத்திய அமைச்சர் திரு கே. ராம் மோகன் நாயுடு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

About Matribhumi Samachar

Check Also

குஜராத்தின் ஏக்தா நகரில் தேசிய பாதயாத்திரையின் நிறைவு விழாவில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்

குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (6.12.2025) குஜராத்தின் ஏக்தா நகரில் உள்ள ஒற்றுமை சிலையில் சர்தார் @150 ஒற்றுமை அணிவகுப்பு – தேசிய பாதயாத்திரையின் நிறைவு விழாவில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், இந்த வரலாற்று சிறப்புமிக்க தேசிய பாதயாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியில்  பங்கேற்பது மிகுந்த கவுரமானது என்று கூறினார். நவம்பர் 26-ம் தேதி அரசியல் சாசன தினத்தன்று தொடங்கிய பாதயாத்திரையின் முக்கியத்துவத்தை அவர் விளக்கினார்.  1,300- க்கும் …